சினிமா பாணியில் போலீஸை அலையவிட்ட பெண்; இறுதியில் நடந்த பரபரப்பு!

அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் பகுதியின் வோர்செஸ்டர் பகுதியில் நின்று கொண்டிருந்த டிரக் ஒன்றை அடையாளம் தெரியாத பெண் ஒருவர் திருடி ஓட்டிச் சென்றுள்ளார். இதனால் பதறிப்போன டிரக்கின் உரிமையாளர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து டிரக்கை கண்டுபிடித்து மீட்டுத்தருமாறு புகார் கொடுத்துள்ளார். வண்டி இருந்த இடத்தை பதிவு செய்து கொண்ட காவல்துறையினர் உரிமையாளர் கொடுத்த தகவலின்படி, அதிலிருந்த ஜி.பி.எஸ் சிக்னலை பின்தொடர்ந்தனர்.

டிரக் சென்று கொண்டிருக்கும் இடத்தை கண்காணித்தவாறு அப்பகுதியில் இருக்கும் காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். அவர்களும் டிரக் வரும்வழியில் பாதுகாப்பு தடுப்புகளை நிறுத்தி டிரக்கை நிறுத்த முயன்றுள்ளனர். ஆனால், டிரக்கை நிறுத்த மறுத்த அந்தப் பெண், பாதுகாப்பு தடுப்புகளை இடித்து தள்ளிவிட்டு, வேகத்தை அதிகரித்துள்ளார். சாலையின் நடுவே நிறுத்தப்பட்டிருந்த காவல்துறையின் வாகனங்களையும் சினிமா பாணியில் நேருக்கு நேராக மோதிவிட்டு சென்றுள்ளார். காவல்துறையினர் தன்னை பின்தொடர்வதை அறிந்து டிரக்கின் வேகத்தை மேலும் கூட்டியுள்ளார்.

காவல்துறையினரும் விடாமல் அந்த டிரக்கை பின்தொடர்ந்தனர். ஒரு கட்டத்தில் சிக்னல்கள் என எதையும் பொருட்படுத்தாமல் ஜெட் வேகத்தில் டிரக் பறந்துள்ளது. எதிரில் வந்த சில வாகனங்களையும் இடித்து தள்ளியுள்ளார். இதனையடுத்து முன்னெச்சரிக்கையாக அந்தப் பெண் செல்லும் வழியில் மற்ற போக்குவரத்து தடை விதித்த காவல்துறையினர், சைரன் ஒலிகளை ஆஃப் செய்துவிட்டு பின் தொடர்ந்துள்ளனர். திடீரென ஒன்வேயில் புகுந்த அந்தப் பெண், அப்பகுதியில் இருந்த மெக்டொனால்ட் உணவகத்தில் டிரக்கை நிறுத்தியுள்ளார். காவல்துறையினர் பின்தொடரவில்லை என நினைத்து அவர் நிறுத்திய நிலையில், காவலர்கள் அவரை சுற்றிவளைத்தனர்.

ஆனால், அப்போதும் தப்பிக்க எண்ணிய அவர், ஒரு காவலரை தாக்கிவிட்டு ஓட்டம்பிடித்துள்ளார். ஒருவழியாக அவரை பிடித்து காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில் கார்டெல் என தெரியவந்தது. டிரக்கை திருடியவுடன் மெக்டொனால்டு உணவகத்தில் ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்துள்ளார். காவல்துறையினரிடம் இருந்து தப்பிவிட்டோம் என நினைத்து மெக்டொனால்டு உணவகத்துக்கு சென்று சாப்பிட முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளார். கார்டெல்லின் தப்பிக்கும் முயற்சியால் மெக்டொனால்டு உணவகத்திலும் சில சேதாரங்கள் ஏற்பட்டன.

இதனையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். கார்டெல் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருட்டு, போக்குவரத்து விதிகளை மீறியது, சாலை விபத்து ஏற்படுத்துதல், அதிகவேகமாக வாகனத்தை இயக்குதல், பொதுச்சொத்துக்கு சேதம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். விரைவில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக மாசசூசெட்ஸ் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

Contact Us