பெண்ணை லாட்ஜ் அறையில் சிறைவைத்து கற்பழித்த கும்பல்!

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண், தனது கணவருடன் கடந்த மாதம் 19-ந்தேதி பழனிக்கு சென்றார். அங்கு கணவன்-மனைவி இருவரும் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு ஊருக்கு புறப்பட்டனர்.

பழனி பஸ் நிலையம் நோக்கி அவர்கள் நடந்து சென்றனர். வழியில் பெண்ணின் கணவர் அருகில் உள்ள கடைக்கு சென்றார். அப்போது அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல், அந்த பெண்ணை கடத்தி செல்ல முயன்றனர்.

இதனைப்பார்த்த அந்த பெண்ணின் கணவர் அவர்களை தடுக்க முயன்றார். அப்போது அந்த கும்பல், பெண்ணின் கணவரை தாக்கிவிட்டு பெண்ணை அருகில் உள்ள ஒரு லாட்ஜூக்குள் தூக்கிச்சென்றனர்.

பெண்ணின் கணவர் லாட்ஜூக்குள் செல்ல முயன்ற போது அவரை அங்கிருந்தவர்கள் குடிபோதையில் இருப்பதாக கூறி அடித்து துரத்தி விட்டனர். இதனால் இரவு முழுவதும் பெண்ணின் கணவர் அந்த பகுதியிலேயே சுற்றி திரிந்தபடி இருந்தார். மறுநாள் காலையில் லாட்ஜில் இருந்து அந்த பெண் தப்பிவந்தார்.

வெளியில் நின்ற கணவரிடம், தன்னை தூக்கிச்சென்ற 3 நபர்கள் லாட்ஜ் அறையில் அடைத்துவைத்து கற்பழித்து விட்டதாக கூறி கதறினார். இதனால் அதிர்ச்சியடைந்த கணவர், மனைவியை அழைத்துக்கொண்டு பழனி போலீஸ் நிலையத்திற்கு சென்றார்.

அங்கு தனது மனைவியை 3பேர் லாட்ஜ் அறையில் அடைத்து வைத்து கற்பழித்து விட்டதாக புகார் கூறினார். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பெண் தனது கணவருடன் கண்ணூருக்கு திரும்பி விட்டார்.

இந்நிலையில் அந்த பெண்ணுக்கு நேற்று திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கண்ணூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அப்போது தனக்கு சிகிச்சையளித்த டாக்டர்களிடம், தன்னை 3 பேர் கற்பழித்து விட்டதாக கூறியிருக்கிறார்.

இதுபற்றி டாக்டர்கள் கண்ணூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் நடந்த சம்பவங்கள் குறித்து போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் அந்த பெண் கூறுவது உண்மை தானா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Contact Us