பின் விளைவு மோசமாக இருக்கும்.. ரஸ்யாவிற்கு கடுமையான எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா!

ரஷ்யாவில் இருந்து வரும் சைபர் தாக்குதல்களை தடுக்க முறையான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் மிகவும் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ரஷ்யாவை அமெரிக்கா எச்சரித்துள்ளது.

அமெரிக்காவில் சமீப காலமாக சைபர் தாக்குதல் மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது.‌ கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்க அரசின் முக்கிய துறைகளின் கணினிகளில் ஹாக்கர்கள் ஊடுருவி உளவு பார்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அமெரிக்காவின் உள்துறை, பாதுகாப்பு, உள்நாட்டு பாதுகாப்பு, நிதி மற்றும் வணிகம் போன்ற 9 அரச துறைகள் மற்றும் மைக்ரோசாப்ட் உட்பட 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் மீது இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சைபர் தாக்குதலின் பின்னணியில் ரஷ்யா இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.

ஆனால் ரஷ்யா அதனை திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் அமெரிக்காவின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான ‘கசேயா’ மீது கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ‘ரான்சம்வேர்’ தாக்குதல் நடத்தப்பட்டது. இது கடந்த டிசம்பர் மாதம் அரசு துறைகளை குறிவைத்து நடத்தப்பட்ட சைபர் தாக்குதலை விட பல மடங்கு பெரிது என சைபர் பாதுகாப்பு வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்ய அதிபர் புடினை நேற்று முன்தினம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

இருவருக்கும் இடையிலான இந்த தொலைபேசி உரையாடல் சுமார் 1 மணி நேரம் நீடித்ததுடன், இந்த உரையாடலின்போது ரஷ்யாவில் இருந்து வரும் சைபர் தாக்குதல்களை தடுக்க முறையான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் மிகவும் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஜோ பைடன் புடினை எச்சரித்துள்ளார்.

புடினுடனான தொலைபேசி உரையாடலுக்கு பின் வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஜோ பைடன் இது குறித்து கூறுகையில்,

“அவரது (புடின்) மண்ணில் இருந்து சைபர் தாக்குதல் வரும்போது, அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை ரஷ்ய அரசிடம் இருந்து அமெரிக்கா எதிர்பார்க்கிறது என்பதை அவருக்கு மிக தெளிவுப்படுத்தினேன்.

அந்த சைபர் தாக்குதலில் ரஷ்ய அரசுக்கு தொடர்பு இல்லை என்றாலும், தாக்குதல் நடத்தியது யார் என்பதை உறுதி செய்ய போதுமான தகவல்களை நாங்கள் அவர்களுக்கு வழங்கினால், அதனைக் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” எனக் கூறினார்.

Contact Us