சீன பரிசோதனைக்கூடத்தில் இருந்து கொரோனா கசிந்ததா? அமெரிக்க விசாரணையில் புதிய ஆதாரம்!

ஒட்டுமொத்த உலகையே இன்று வரை கதிகலங்க வைத்து வருகிற கொரோனா வைரஸ் தோன்றியது எங்கே என்பதில் இன்னும் குழப்பம் நீடிக்கிறது.

இந்த வைரஸ், சீனாவின் உகான் நகர வைராலஜி நிறுவன பரிசோதனைக்கூடத்தில் செயற்கையாக உருவாக்கி கசியவிடப்பட்டதா அல்லது விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியதா என்பதில் உறுதியற்ற நிலை உள்ளது.

சீனாவில்தான் இந்த வைரஸ் உருவாகி பரவியது என்பதில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் உறுதியாக நம்பினார். இதில் அவர் சீனாவை பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இதனால் இரு நாடுகள் இடையே மோதல்போக்கு உருவானது.

கொரோனா வைரஸ் தோன்றியதாக கூறப்படுகிற காலத்தில் உகான் பரிசோதனைக்கூடத்தை சேர்ந்த பலரும் ஆஸ்பத்திரிகளில் சேர்ந்து சிகிச்சை பெற்றதாகவும், இதனால் கொரோனா வைரஸ் அங்கே உருவாகி இருக்கலாம் என்றும் அமெரிக்க உளவு அமைப்புகள் இப்போது கருதுகின்றன.

இது குறித்த தகவல்கள் வெளியானதையடுத்து விசாரணை நடத்தி 90 நாளில் நம்பத்தகுந்த ஆதாரங்களுடன் அறிக்கை அளிக்குமாறு அமெரிக்க உளவு அமைப்புகளுக்கு அந்த நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த மே மாதம் உத்தரவிட்டார்.

இந்த விசாரணை நடந்து வருகிறது.

இந்த விசாரணையை நடத்தி வருகிற உளவு அமைப்புகளிடையே கொரோனா வைரஸ் எங்கிருந்து தோன்றி பரவியது என்பதில் பொதுவான கருத்து இல்லை.

ஆனால் இந்த வைரஸ் உகான் வைராலஜி நிறுவனத்தின் பரிசோதனைக்கூடத்தில் இருந்துதான் கசிய விடப்பட்டுள்ளது என்பது நம்பத்தகுந்ததாக உள்ளது என்று அமெரிக்க அதிகாரிகள் கருதுகிறார்கள். இதில் சீனா மீது அவர்கள் உறுதிபட கை நீட்டுகிறார்கள்.

குறிப்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் சல்லிவன் மற்றும் சி.ஐ.ஏ. போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகள் உகான் வைராலஜி நிறுவனத்தின் பரிசோதனைக்கூடத்தில் இருந்துதான் கொரோனா வைரஸ் கசிய விடப்பட்டிருக்க வேண்டும் என்பது நம்பத்தகுந்ததாக உள்ளது என கருதுகின்றனர்.

இதில் சின்னதாய் புதிய ஆதாரம் கிடைத்திருப்பதாக சி.என்.என். டெலிவிஷன் பல்வேறு மேற்கோள்களுடன் தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Contact Us