ஒலிம்பிக்கில் பி.வி.சிந்து வரலாற்று சாதனை.. இரண்டாவது முறையாக பதக்கம் வென்றார்

 

 

இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்து ஒலிம்பிக்கில் இரண்டாவது முறையாக பதக்கம் வென்று புதிய சரித்திரம் படைத்திருக்கிறார். ஜப்பான் தலைநகர் டோக்யோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டித் தொடரின் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் காலியிறுதி வரை எந்தவொரு செட்டையும் இழக்காமல் வெற்றி நடை போட்டார் பி.வி.சிந்து. இருப்பினும் அரையிறுதியில் தைவானைச் சேர்ந்த உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான Tai Tzu-Ying சிந்துவுக்கு அதிர்ச்சியளித்தார்.

அரையிறுதிப் போட்டியில் சிந்துவை நேர்செட்டில் வீழ்த்தியதன் மூலம் சிந்துவின் தங்கப்பதக்க கனவை அவர் தகர்த்தார். இருப்பினும் மனம் தளராத பி.வி.சிந்து வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் சீன வீராங்கனை He Bingjiao-வை இன்று எதிர்கொண்டார்.

அணல் பறந்த இப்போட்டியில் சீன வீராங்கனையின் கையை ஓங்க விடாமல் கடைசி வரை ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்திய சிந்து 21-13, 21-15 என்ற நேர் செட்டில் அவரை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றார். சிந்து வெல்லும் இரண்டாவது ஒலிம்பிக் பதக்கம் இதுவாகும்.

இந்த வெற்றியின் மூலம் ஒலிம்பிக் போட்டித்தொடரில் தொடர்ந்து இரண்டாவது பதக்கத்தை வென்றிருக்கிறார் சிந்து. அத்துடன் ஒலிம்பிக் போட்டிகளில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண் என்ற மகத்தான சாதனைக்கும் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார் சிந்து.

2016ம் ஆண்டு ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் இறுதிப் போட்டி வரை சென்ற சிந்து ஸ்பெயின் நாட்டின் நட்சத்திர வீராங்கனையான கரோலினா மரினுடன் தோல்வி அடைந்தார். ரியோவில் வெள்ளிப்பதக்கம் வென்ற சிந்து தற்போது டோக்யோவில் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.

டோக்யோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றதன் மூலம் ஒலிம்பிக் போட்டிகளில் இரண்டு பதக்கங்கள் வென்ற முதல் இந்திய பெண் என்ற புதிய வரலாற்று சாதனை படைத்துள்ள பி.வி.சிந்துவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

Contact Us