ஆப்கன் நிலவரம்: பிரதமர் மோடி அவசர ஆலோசனை!

ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து, மூத்த மத்திய அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன், பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை நடத்தினார்.

தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில், தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி உள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இதை அடுத்து ஆப்கானிஸ்தான் நாட்டில் வசிக்கும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களை அந்தந்த நாடுகள் சிறப்பு விமானம் மூலம் தங்களது சொந்த நாட்டிற்கு அழைத்து வரும் பணியில் ஈடுபட்டுள்ளன. ஆப்கானிஸ்தானில் வசிக்கும் இந்தியர்களை இரண்டு சிறப்பு விமானங்களில் மத்திய அரசு தாயகம் அழைத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில், ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, அரசின் மூத்த அதிகாரிகளுடன் அவசரமாக ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய பாதுகாப்பு செயலாளர் அஜித் தோவல் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில், ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா திரும்பியவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக செய்யும்படி பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியதாகத் தெரிகிறது. மேலும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி உத்தரவிட்டார்.

Contact Us