அழகு நிலையத்திற்கு வரும் பெண்களை மயக்கும் கணவர்- மனைவி பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி

 

தான் நடத்தி வந்த பியூட்டி பார்லரில் வேலை பார்த்து வந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் அடுத்தடுத்து தனது பார்லரில் வேலை பார்க்கும் பெண்களை திருமணம் செய்ய முயற்சித்து வருவதாக முதல் மனைவி கொந்தளித்து எழுந்து இருக்கிறார். அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததால் காவல்துறை துணை ஆணையர் அலுவலகத்திற்குச் சென்று தீக்குளிக்க முயன்று பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

சென்னை அம்பத்தூர் அடுத்த புதூரை சேர்ந்தவர் அஜய் சத்யா. இவர் புதூர் பகுதியில் டோனி அண்ட் காய்ஸ் என்கிற அழகு நிலையம் நடத்தி வருகிறார். திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்த கவிதா என்பவர் இவரது அழகு நிலையத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது வேலைக்குச் சேர்ந்த மூன்று மாதத்திலேயே அவரை காதலித்து இருக்கிறார் அஜய் சத்தியா. அழகு நிலையத்தின் முதலாளியே தன்னை காதலிப்பதாக பெருமையாக நினைத்து கவிதாவும் அஜய் சத்யாவை விரும்பியிருக்கிறார். இதன்பின்னர் கடந்த 2019 ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதியன்று திருவள்ளூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

அழகு நிலையத்தின் மாடி வீட்டிலேயே இருவரும் குடித்தனம் நடத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக தண்டையார்பேட்டையை சேர்ந்த சிந்து என்கிற இளம்பெண் இந்த அழகு நிலையத்திற்கு வந்து பணிபுரிந்து வந்துள்ளார். அவருக்கும் அஜய் சத்யாவுக்கும் தற்போது கள்ள உறவு ஏற்பட்டிருக்கிறது. இதை தெரிந்து கொண்ட கவிதா இருவரையும் கண்டித்தும் பிரயோசனம் இல்லாமல் போய்விட்டது.

இதனால் கோபித்து கொண்டு பெற்றோர் வீட்டுக்கு செல்ல இதுதான் சமயமென்று சிந்துவுடன் குடித்தனம் நடத்த ஆரம்பித்திருக்கிறார் அஜய் சத்தியா. தற்போது கவிதாவையே வேண்டாம் என்று ஒதுக்கி தள்ளுகிறார்.

இருவரையும் கண்டித்த போது சிந்து தனது ஆண் நண்பர்களை வைத்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறார் என்று அச்சத்தில் அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்திருக்கிறார். ஆனால் அம்பத்தூர் காவல் துறையினர் இந்த புகாரின் பேரில் நடவடிக்கை எதுவும் எடுக்காததால் ஆவடி துணை ஆணையர் அலுவலகத்திற்குச் சென்று அங்கே தன் உடலில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்ற இருக்கிறார்.

இதை கண்டு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை மீட்டு துணை ஆணையர் மகேஷிடம் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். மகேஷ் கவிதாவிடம் ஒரு மணிநேரம் விசாரணை நடத்தி இருக்கிறார். அப்போது தனக்கு நேர்ந்த கொடுமைகளை பற்றி சொல்லி அழுதிருக்கிறார் கவிதா. அழகு நிலையத்திற்கு வரும் பல பெண்களுடன் அஜய் சத்யா கள்ள உறவு வைத்திருக்கிறார் என்று சொல்லி இருக்கிறார். இதன் பின்னர் புகாரின்பேரில் அஜய் சத்யா மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறி கவிதாவை அனுப்பி வைத்திருக்கிறார் துணை ஆணையர் மகேஷ்.

Contact Us