“மன்னிக்க மாட்டேன், காரணமானவர்கள் வேட்டையாடப்படுவார்கள்” ஜோ பைடன் அதிரடி அறிவிப்பு

 

காபூல் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தியவர்களை விடமாட்டோம், அவர்களை வேட்டையாடுவோம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சபதம் செய்துள்ளார். மேலும், “இதை மன்னிக்கவும் மாட்டோம், மறக்கவும் மாட்டோம். உங்களை வேட்டையாடுவோம். பதிலடி கொடுப்போம்” என்று அவர் அதிரடியாக கூறினார்.

காபூல் நகரம் தாலிபன்களின் வசமானபிறகு வரும் 31-ஆம் திகதிக்குள் அமெரிக்க படைகள் அனைத்தும் முற்றிலுமாக வெளியேற்றப்பட வேண்டும். இதற்கான காலக்கெடு நெருங்குவதால் ஆயிரக்கணக்கானோர் விமான நிலையத்துக்கு உள்ளேயும் வெளியேயும் கூடியிருக்கிறார்கள்.

இந்த நிலையில், உள்ளூர் நேரப்படி மாலை ஆறு மணியளவில் விமான நிலையத்தின் நுழைவு வாயில் அருகே முதல் குண்டு வெடித்தது. சில நிமிடங்களுக்குப் பிறகு ஆப்கானியரை மீட்பதற்காக பிரிட்டன் அதிகாரிகள் பயன்படுத்திவந்த விமான நிலையத்துக்கு அருகேயுள்ள ஹோட்டலில் மற்றொரு குண்டு வெடித்தது.

இதற்கு பதிலடி கொடுக்கும் முகமாகவே ஜோ பைடன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

“பயங்கரவாதிகளால் அமெரிக்காவை ஒருபோதும் தடுக்க முடியாது” என்றும் கூறியுள்ளார்.

மெரைன்ஸ் எனப்படும் அமெரிக்காவின் சிறப்புப் படைப் பிரிவைச் சேர்ந்த 11 பேரும் ஒரு கடற்படை மருத்துவரும் கொல்லப்பட்டவர்களில் அடங்குவார்கள்.

கடந்த பெப்ரவரி மாதத்துக்குப் பிறகு அமெரிக்க ராணுவத்தினர் கொல்லப்படுவது இதுவே முதல்முறையாகும்.

“பிறரது உயிரைக் காப்பாற்றும் தன்னல நோக்கற்ற நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வீரர்கள் ஹீரோக்கள் ” என்று பைடன் புகழாரம் சூட்டினார்.

இதேவேளை, இந்த தாக்குதலுக்கு ISIS தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Contact Us