ஜாமீன் கிடைத்தும் சிறையில் இருந்து வெளிவர முடியாமல் தவிக்கும் மீரா மிதுன்

போலீசார் தன் மீது வழக்குகள் போட்டு தற்கொலைக்கு தூண்டுவதாக நடிகை மீரா மிதுன் நீதிமன்றத்தில் புகார் தெரிவித்தார்.

பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுன், மத்திய குற்றப்பிரிவு போலீசாரால், கடந்த மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஏற்கனவே அவர் மீது எழும்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஊழியரை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக, நடிகை மீரா மிதுன் மீது நீதிமன்றத்தில், போலீசார் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில், எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடிகை மீரா மிதுன் இன்று ஆஜரானார். அப்போது அவர் மாஜிஸ்திரேட்டிடம், போலீசார் தன் மீது வழக்குகள் போட்டு தற்கொலைக்கு தூண்டுவதாக புகார் தெரிவித்தார். மேலும் எழும்பூர் போலீசார், இந்த வழக்குகள் குறித்து தன்னிடம் முறையாக தகவல் தெரிவிக்கவில்லை என்றும், தன் சார்பாக வாதாட வழக்கறிஞர் வரவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.

பின்னர், இந்த வழக்கில் நீதிபதி அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மீரா மிதுன் மீது மொத்தமுள்ள நான்கு வழக்குகளில் இதுவரை 3 வழக்குகளில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. பட்டியலினத்தவர்களை அவதூறாகப் பேசிய வழக்கில் மட்டும் அவருக்குஜாமீன் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Contact Us