7 வயது மகளை கொன்ற வழக்கில் தண்டனையில் இருந்து தப்பிய கனேடிய தாயார்

 

பிரிட்டிஷ் கொலம்பியாவில் தனது ஏழு வயது மகளை கொலை செய்த வழக்கில் தாயார் ஒருவர் தண்டனையில் இருந்து தப்பியுள்ளார். கடந்த ஜூலை 2018ல் லாங்லியின் வில்லோஃபி ஸ்லோப் சுற்றுப்புறத்தில் உள்ள குடியிருப்பின் குளியலறையில் 7 வயதேயான ஆலியா ரோசா இறந்து கிடந்தார். முதற்கட்ட விசாரணையில் சிறுமியின் தாயார் கெர்ரியன் லூயிஸ். அவருக்கு போதை மருந்து அளித்து, குளியறை தொட்டி தண்ணீரில் மூழ்கடித்தது மரணத்திற்கு காரணமானதாக தெரிய வந்தது.

ஆனால் இந்த வழக்கு தொடர்பில் விசாரணையின் போது கூறிய நீதிபதி மார்தா டெவ்லின், சிறுமியின் மரணம் தாங்க முடியாத துக்கத்தை தரக்கூடியதாக இருந்தாலும், விசாரணையில் வழங்கப்பட்ட சான்றுகள் தாயாரின் குற்றத்தை நிறுவுவதில் உறுதியாக இல்லை என்று கூறினார்.

மட்டுமின்றி, தமது மகளுக்கு திட்டமிட்டே அவர் போதை மருந்து அளித்தாரா என்பது தொடர்பிலும் தெளிவான சான்றுகள் இல்லை என்றார். மேலும், சிறுமி குளியலறை தொட்டியில் தவறி விழுந்திருக்கவும் வாய்ப்பு உள்ளது என நியூ வெஸ்ட்மின்ஸ்டர் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்தா டெவ்லின் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

சிறுமியின் தாயார் குளியலறைக்கு சென்று பார்க்கும் போது சிறுமி உயிருடன் இருந்தாரா அல்லது இறந்திருந்தாரா என்பதற்கும் சான்றுகள் இல்லை என்றார். இதனால் அவரை கொலை குற்றவாளி என நிறுவ முடியாது எனவும் நீதிபதி மார்தா டெவ்லின் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வழக்கின் பின்னணியில் மேலும் பல தகவல்கள் மறைந்திருக்கலாம், ஆனால் அவை எதுவும் நீதிமன்றத்தில் நிறுவப்படவில்லை என கூறியுள்ள அவர், 38 வயதான கெர்ரியன் லூயிஸ் இந்த வழக்கில் குற்றவாளி அல்ல என குறிப்பிட்டுள்ளார்.

இந்த தீர்ப்பு, அப்போது நீதிமன்றத்தில் குழுமியிருந்தவர்களிடையே அதிர்ச்சியையும் முணுமுணுப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Contact Us