ஹமாஸ் போராளிகளுக்கு பதிலடி.. காசாவில் வான்வழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல்..!!

 

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்கு இடையில் பல வருடங்களாக எல்லை பிரச்சனை நீடிக்கிறது. ஜெருசலேம் நகர் தங்களுக்கு தான் சொந்தம் என்று இரண்டு நாடுகளுக்கிடையிலும் போட்டி நிலவுகிறது. இந்த பிரச்சனையில் பாலஸ்தீனத்தில் இருக்கும் காசா நகரத்தை நிர்வகித்து வரும் ஹமாஸ் போராளிகள், இஸ்ரேல் நாட்டின் ராணுவத்தினருடன் மோதி வருகிறார்கள்.

கடந்த மே மாதத்தில், இரு நாடுகளுக்கும் இடையே, சுமார் 11 தினங்களாக தொடர் சண்டை ஏற்பட்டதில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 3000 நபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அதன் பின்பு, சர்வதேச நாடுகள் கொடுத்த அழுத்தத்தினால் இருநாடுகளும் போரை நிறுத்துவதாக அறிவித்தன.

எனினும், போர் நிறுத்தத்தை மீறி, இரு நாடுகளும் மோதிக்கொண்டு தான் இருக்கிறது. அதன்படி, கடந்த திங்கட்கிழமை அன்று மாலையில் காசா நகரத்திலிருந்து ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலின் தெற்குப் பகுதியை நோக்கி பலூன்களில் வெடிபொருட்களை நிரப்பி பறக்கச் செய்தனர்.

அவை வெடித்துச் சிதறி பல பகுதிகளில் தீப்பற்றி எரிந்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அன்று நள்ளிரவில், இஸ்ரேல் ராணுவத்தினர் காசா நகரில் வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.

Contact Us