வீடு ஒன்றிற்கு வாடகைக்கு வந்த இளம்பெண்… திடீரென வாடகைக்கு விட மறுத்த உரிமையாளர்: கூறிய காரணம்

 

கனடாவில் பல்கலைக்கழகம் ஒன்றில் பயில்வதற்காக வீடு ஒன்றை வாடகைக்கு ஒப்பந்தம் செய்துள்ளார் ஒரு மாணவி.

Saskatchewanஐச் சேர்ந்த Kadince Ball (18) என்ற அந்த இளம்பெண், ஒன்ராறியோவிலுள்ள லண்டனில் வீடு ஒன்றின் ஒரு அறையை வாடகைக்கு பேசி முடித்துள்ளார். அது தொடர்பான ஒப்பந்தத்தில் அவரும், வீட்டின் உரிமையாளரான Esther Leeயும் கையெழுத்திட்டிருக்கிறார்கள். முன்பணமாக Kadince 50 டொலர்களும் செலுத்தியுள்ளார்.

பின்னர் தன்பொருட்களுடன் லண்டன் வந்த Kadince ஒரு ஹொட்டலில் தங்கியிருந்து மீண்டும் ஒரு முறை வீட்டைப் பார்க்கவந்திருக்கிறார்.

அவர் வீட்டைப் பார்த்துவிட்டுத் திரும்பியதும் Esther தொலைபேசியில் Kadinceஐ அழைத்து, நீ என் வீட்டில் தங்குவதை நான் விரும்பவில்லை என்று கூறியிருக்கிறார். ஒருவேளை வாடகை போதவில்லையோ என்று எண்ணிய Kadince, அது குறித்து வேண்டுமானால் பேசிக்கொள்ளலாம் என்று கூறியும், Esther விடாப்பிடியாக நீ இங்கே வரவேண்டாம் என்றே கூற, வேறு வழியில்லாமல் அடுத்த வீட்டைத் தேடி அலைந்திருக்கிறார் Kadince.

இந்நிலையில், Kadince அந்த வீட்டு உரிமையாளர் மீது வழக்குத் தொடரலாம் என அவரது சட்டத்தரணி ஆலோசனை கூற, தனக்கு இப்போதைக்கு தன் படிப்பின் மீது கவனம் செலுத்துவதுதான் முக்கியம் என்றும், பிறகு வேண்டுமானால் வழக்குத் தொடர்வது குறித்து யோசிக்கலாம் என்று கூறிவிட்டார் Kadince.

சரி Kadinceக்கு Esther வீடு தர மறுக்கக் காரணம் என்ன என கேட்பதற்காக பிரபல தொலைக்காட்சி ஒன்று Estherஐ அணுகியுள்ளது.

அதற்கு அவர் அளித்த பதில், முதல் நாள் என்னைப் பார்க்கவரும்போது அந்த பெண் உடலை முழுமையாக மறைக்கும் வகையில் உடையணிந்திருந்தார்.

ஆனால், அடுத்த முறை வரும்போது அவரது தோள்களிலிருந்து கைகள் முழுவதையும் தன்னால் பார்க்க முடிந்தது என்றும், Kadince தன் கைகளில் ஒன்றில் பெரிய பாம்பு ஒன்று மலர் ஒன்றைச் சுற்றியிருப்பது போல பச்சை குத்தியிருந்ததையும், ஒரு தோளில் தேவதை ஒன்றின் உருவத்தையும், இன்னொரு தோளில் ஒரு பெரிய மலரையும் பச்சை குத்தியிருந்ததாகவும், அவரது கையைப் பார்க்கவே தனக்கு மிகவும் பயங்கரமாக இருந்ததாகவும், பயத்தாலேயே தான் அவருக்கு வீடு கொடுக்க மறுத்துவிட்டதாகவும் கூறியுள்ளார் Esther!

Contact Us