தமிழ் நடிகர் சிவாஜி கணேசனுக்கு மரியாதை செய்த கூகுள்! நெகிழ்ந்து போன ரசிகர்கள்

 

திரை உலகில், மாபெரும் உச்சங்களை தொட்ட நடிகர் சிவாஜி கணேசனின் 93 வது பிறந்தநாளில், அவருக்கு மரியாதை மற்றும் அஞ்சலி செலுத்தும் விதமாக கூகுள் டூடுல் ஒன்றை உருவாக்கி உள்ளது.

நடிகர் சிவாஜி கணேசன், திரைப்படம் நடிக்க துவங்கும் முன், மேடை நாடகங்களில் நடித்து வந்தார்.

‛சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்’ என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை பாராட்டிய ஈ.வெ.ரா., அவரை ‛சிவாஜி’ கணேசன் என அழைத்தார்.

பிறகு அதுவே அவரது பெயராக நிலைத்தது. 1952ல் வெளிவந்த ‛பராசக்தி’ படம் மூலம் திரையுலகுக்குள் நுழைந்த அவர் 300க்கும் மேற்பட்ட தமிழ் படங்கள், 9 தெலுங்கு படம், இரண்டு ஹிந்தி படம், ஒரு மலையாள படத்திலும் நடித்துள்ளார்.

செவாலியர் பட்டம் பெற்ற முதல் இந்தியரான சிவாஜி கணேசன், கலைமாமணி விருது, பத்மஸ்ரீ விருது, பத்ம பூஷன் விருது, தாதா சாகெப் பால்கே விருது என பல விருதுகளை பெற்றுள்ளார்.

இவருடைய பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இன்று சிவாஜி கணேசனின் 93வது பிறந்தநாளான இன்று, அவரை கவுரவிக்கும் வகையில், உலகளவில் தேடுபொறியில் முன்னணி நிறுவனமாக திகழும் கூகுள், தனது இணையப்பக்கத்தில் சிவாஜி கணேசனுக்கு டூடுல் வெளியிட்டுள்ளது.

இதனை பெங்களூரைச் சேர்ந்த ஓவிய கலைஞர் நூபூர் ராஜேஷ் சோக்ஸி உருவாக்கியுள்ளார்.

அந்த டூடுலில் சிவாஜியின் மூன்று கெட்டப் அடங்கிய ஓவியங்களும் அதன் பின்னணியில் படச்சுருளும் உள்ளன.

இதை தன்னுடைய டுவிட்டரில் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் விக்ரம் பிரபு, இதோ பெருமைமிகு சிவாஜி கணேசனின் 93வது பிறந்தநாளை ஒட்டி கூகுள் டூடுல் வெளியிட்டுள்ளது.

கூகுள் இந்தியாவுக்கும், இந்த டூடுலை உருவாக்கிய நூபூர் சோக்ஸிக்கும் நன்றி. இது இன்னொரு பெருமித தருணம். அவரை இன்றும் நேசிக்கிறேன். அவரது இழப்பின் வலி ஒவ்வோர் ஆண்டும் கூடுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

Contact Us