திருமணமான 4 மாதத்தில் கொடூரம்… கணவரை கொலை செய்து உடலை கிணற்றில் வீசிய மனைவி!

 

புதுக்கோட்டை அருகே கணவரை கொலை செய்து கிணற்றில் வீசிய மனைவியை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் ஊராட்சி போரம் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டித்துரை (29). கூலி தொழிலாளி. இவருக்கு, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நந்தினி (25) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணமானது முதல் கணவன் – மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், கடந்த மாதம் 20ஆம் தேதி முதல் பாண்டித்துரை மாயமாகினார். குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இதனால், பாண்டித்துரையின் தாய் மீனாட்சி, ஆதனக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், சந்தேகத்தின் பேரில், பாண்டித்துரை மனைவி நந்தியினிடமும் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கடந்த 20ஆம் தேதி ஏற்பட்ட தகராறில் பாண்டித்துரை, தனது கழுத்தை நெரித்ததாகவும், அதனால் கத்தியை எடுத்து அவரது தலையில் தாக்கியதில் பாண்டித்துரை உயிரிழந்ததாகவும் தெரிவித்தார்.

மேலும், வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் சடலத்தை வீசிவிட்டு எதுவும் தெரியாதது போல், நந்தினி நாடகம் ஆடியதும் அம்பலமானது. இதனை அடுத்து, கிணற்றில் அழுகிய நிலையில் கிடந்த பாண்டித்துரையின் உடலை மீட்ட ஆதனக்கோட்டை போலீசார், அதனை பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து கொலை வழக்குப்பதிவு செய்து நந்தினியை கைது செய்தனர்.

Contact Us