தஞ்சை அருகே இறைச்சிக்கடை உரிமையாளர் வெட்டிக்கொலை… கடையில் மதுஅருந்தியதை கண்டித்ததால் வெறிச்செயல்!

 

தஞ்சாவூர் அருகே கடையில் அமர்ந்து மதுஅருந்தியவர்களை தட்டிக்கேட்ட இறைச்சிக் கடை உரிமையாளர் வெட்டிக் படுகொலை செய்யப்பட்டார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி மீன் கொட்டகை பகுதியை சேர்ந்தவர் செல்வம்(47). இவர் வீட்டின் முன்பாக இறைச்சி கடை வைத்து நடத்தி வந்தார். தற்சமயம் புரட்டாசி மாதம் என்பதால் இறைச்சி கடை செயல்படாமல் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர், செல்வத்தின் கடையில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.

இதனை கண்ட செல்வம், அவர்களை அங்கு மதுஅருந்தக்கூடாது என கூறி கண்டித்துள்ளார். அப்போது, இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த போதை இளைஞர் ஒருவர், செல்வத்தை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினார். இதில் கழுத்து பகுதியில் பலத்த காயமடைந்த செல்வத்தை, உறவினர்கள் மீட்டு திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்த திருக்காட்டுப்பள்ளி போலீசார், செல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய 3 இளைஞர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்

Contact Us