கருகலைப்பால் சிதைந்த பெண்: தனியார் மருத்துவமனைக்கு சீல் வைத்த அதிகாரிகள்..!

சின்னசேலம் அருகே அதிக ரத்த போக்கால் கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள பாண்டியன் குப்பத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி சந்திரலேகா (27). இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ள நிலையில் சந்திரலேகா கர்ப்பம் அடைந்தார். குழந்தை வேண்டாமென்ற முடிவில் சென்னை சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு ஊசியை போட்டுகொண்டு மாத்திரைகளை சாப்பிட்டு வந்தார்.

இந்த நிலையில் சந்திரலேகாவுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதால் அந்த மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கருவை அகற்றினர். தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அவரது கர்ப்பப்பையையும் அகற்றியுள்ளனர்.

அதனை தொடர்ந்து சந்திரலேகாவுக்கு தொடர்ந்து ரத்த போக்கு அதிகமானதால் சேலத்தில் உள்ள வேறொரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவரது உடல்நிலை மிகவும் மோசமானதால் ஏற்கனவே சிகிச்சை பெற்ற சின்னசேலம் மருத்துவமனைக்கு சந்திரலேகாவை அனுப்பி வைத்தனர்.

அங்கு வந்த சந்திரலேகாவின் உறவினர்கள், தவறான கருக்கலைப்பு சிகிச்சையால்தான் சந்திரலேகாவின் உடல் மோசமானது என்றுகூறி மருத்துவமனையை அடித்து உடைத்தனர். தொடர்ந்து அங்கு சாலை மறியலில் ஈடுபட்டவர்களை பேச்சு வார்த்தை நடத்தி அனுப்பிய போலீசார் தனியார் மருத்துவமனையை சீல் வைத்தனர்.

அதனையடுத்து, மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சந்திரலேகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக சந்திரலேகாவின் கணவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையை முடுக்கியுள்ளனர்.

Contact Us