மனைவியின் கொடுமையால் கணவன் தற்கொலை… செல்போன் வீடியோவால் சிக்கிய குடும்பம்

சென்னையில் மனைவியின் சித்திரவதையால் கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஜாம்பஜார் முகமது ஹுசைன் சந்து பகுதியைச் சேர்ந்தவர் வித்தியகுமார். இவர் திமுக 115வது பகுதி இளைஞரணி துணை அமைப்பாளராக பொறுப்பு வகித்து வந்தார். இந்த நிலையில் வித்தியகுமாருக்கும் அவரது மனைவி நிஷாந்தினிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. அதன் காரணமாக நிஷாந்தினி தனது அக்கா, மாமா ஆகியோருடன் சேர்ந்து கணவனை அடித்து சித்திரவதை செய்து வந்துள்ளார்.

நாளுக்கு நாள் மனைவி மற்றும் மனைவியின் உறவினர்களின் அட்டூழியங்கள் அதிகமாக, கடும் மன உளைச்சலில் இருந்த வித்தியகுமார் கடந்த 4ம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஜாம்பஜார் போலீசாருக்கு முதற்கட்டமாக வித்தியகுமாரின் செல்போனின் இருந்த வீடியோ ஆதாரத்தை கைப்பற்றியுள்ளனர்.

தற்கொலை செய்துகொள்ளுவதற்கு முன்பு வித்தியகுமார் பதிவு செய்திருந்த அந்த உருக்கமான வீடியோவில் கூறியிருப்பதாவது, எனது மனைவி அவரது உறவினர்களின் பேச்சை கேட்டு என்னை செய்யாத கொடுமைகளை செய்து வருகிறார். இரவில் தூங்கும்போது, கால்மாட்டில் பேப்பரை கொளுத்துவது, அடிப்பது உள்ளிட்ட சித்திரவதைகளை செய்து வருகிறார்.

மேலும், என்னை கொச்சை கொச்சை வார்த்தைகளால் திட்டி அசிங்கப்படுத்துகிறார்” என அந்த வீடியோவில் கூறியுள்ளார். அத்துடன், எனது சாவுக்கு நிஷாந்தினி, கண்ணன் மற்றும் உஷா ஆகிய மூன்று பேர் தான் காரணம். எனது பெற்றோரை நல்லபடியாக பார்த்துக்கொள்ளுங்கள” என்று வித்தியகுமார் உருக்கமாக பேசிவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அந்த வீடியோவை முக்கிய ஆதாரமாக எடுத்துள்ள போலீசார் மேற்படி மூன்று பேர் மீதும் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Contact Us