சீனா வழங்கிய கடுமையான தண்டனை: உடையும் ராஜதந்திர நம்பிக்கை! இலங்கை அரசுக்கு எச்சரிக்கை

 

தொடர்புகள் உடையும் வகையில் தன்னிச்சையான தீர்மானங்களை எடுக்கும் நபர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். எம்பிலிப்பிட்டியவில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

மக்கள் வங்கிக்கு தடை விதித்துள்ளதன் மூலம் குறிப்பாக மக்கள் வங்கியை கறுப்பு பட்டியலில் சேர்த்து, அந்த வங்கிக்கு சீனா கடுமையான தண்டனை வழங்கியுள்ளது. இது அண்மைய காலத்தில் மிகப் பெரிய ராஜதந்திர பிரச்சினையாக மாறும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இந்த பாரதூரமான பிரச்சினைக்கு அமைச்சுக்களில் பசளை சம்பந்தமான தீர்மானங்களை எடுத்தவர்களே பொறுப்புக் கூற வேண்டும்.

அமைச்சர்கள் உட்பட அதிகாரிகளே இதற்கு பொறுப்பாளிகள். பசளையை இறக்குமதி செய்யும் முன்னர் பரிசோதனைகளை நடத்தாது ஏன் கடன் பத்திரம் வழங்கப்பட்டது?. இறக்குமதி செய்யப்போகும் பொருளின் அனைத்து தகவல்களை தேடி அறிந்து, அது நல்லதா, பாதிப்பை ஏற்படுத்துமா என்பதை கண்டறிந்த பின்னரே கடன் பத்திரத்தை மக்கள் வங்கி வெளியிட தீர்மானிக்கும்.

பொருள் இறக்குமதி செய்யப்பட்ட பின்னர் தகவல்களை தேடி அறிந்து விசாரணை செய்யும் பழக்கம் உலகில் இல்லை. இலங்கையிலும் அது நடைமுறையில் இருக்கவில்லை. அப்படியானால், இந்த சம்பவம் எப்படி நடந்தது?. உரிய பரிசோதனையின்றி பொருளை இறக்குமதி செய்துள்ளனர். அதற்காக கடன் பத்திரம் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது பணம் தரவில்லை என்ற குற்றச்சாட்டிலேயே சீன ஆத்திரமடைந்துள்ளது.

மறுபுறம் சீனா இந்த விடயம் தொடர்பில் சரியான ராஜதந்திர நடவடிக்கையை எடுக்கவில்லை. சீனா தனது அதிகாரத்தை பயன்படுத்தி, இலங்கையின் மக்கள் வங்கியை கறுப்பு பட்டியலில் சேர்த்துள்ளது. இது தன்னிச்சையான நடவடிக்கை. சீன அதிகாரிகள், எமது வெளிவிவகார அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு ஒன்றுக்கு வந்திருக்க வேண்டும். இந்த முறையற்ற வேலைத்திட்டங்களின் பயனையே நாங்கள் அனுபவிக்கின்றோம் என்பதை ஜனாதிபதிக்கு நினைவூட்ட விரும்கிறேன்.

உரிய நடைமுறைகளை பின்பற்றாது, விஷத்தன்மையான பசளை இறக்குமதி செய்ய இலங்கைக்கு இறக்குமதி செய்ய அழுத்தம் கொடுத்தது யார்?. கட்டுப்படுத்தியது யார்?. வழிமுறைகளை திட்டமிட்டது யார்? இவர்கள் பற்றி விசாரித்து அறிந்து தகுதி தராதரம் பாராது தண்டனை வழங்க வேண்டும்.

இலங்கைக்கு சர்வதேச ரீதியில் அவப்பெயர் ஏற்படும் வகையில் மாத்திரமல்ல, இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் இருந்து வரும் ராஜதந்திர உறவுகள் பழுதடையும் வகையில் தன்னிச்சையான முடிவுகளை எடுத்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படியான முறைகேடுகள் எதிர்காலத்தில் நடக்காதபடி ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படியில்லை என்றால் மிகப் பெரிய அனர்த்தத்தை நாம் எதிர்நோக்க நேரிடும் எனவும் ஓமல்பே சோபித தேரர் குறிப்பிட்டுள்ளார்.

Contact Us