கடைக்கு முன்பாக சிறுநீர் கழித்த வாலிபர் ரத்த வாந்தி எடுத்து பலி

 

கடைக்கு முன்பாக சிறுநீர் கழித்த வாலிபரை தாயும் மகனும் சேர்ந்து அடித்து உதைத்ததில் ரத்த வாந்தி எடுத்து வாலிபர் உயிரிழந்திருக்கிறார். சேலம் மாவட்டத்தில் ஓமலூர் பேருந்து நிலையத்தில் இச்சம்பவம் அரங்கேறியிருக்கிறது.

ஓமலூர் பேருந்து நிலையத்தின் அருகே சுப்பிரமணி என்பவர் வளையல்கடை நடத்தி வந்துள்ளார். இவரது கடைக்கு அருகே சந்தோஷ் கதிர்வேல் என்பவரும் கடை நடத்தி வருகிறார். நேற்று வியாபாரம் முடித்துவிட்டு சுப்பிரமணியன் கடையை மூடிவிட்டு புறப்பட்டிருக்கிறார்.

அப்போது சுப்பிரமணி, சந்தோஷ் கதிர்களின் கடைக்கு முன்பாக சிறுநீர் கழித்திருக்கிறார் . இதை பார்த்த சந்தோஷ் மற்றும் அவரது தாய் சுகுணாவும் சுப்ரமணியனிடம் சத்தம் போட்டிருக்கிறார்கள். இதில் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் செய்து இருக்கிறார்கள். இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்திருக்கிறது .

சுப்பிரமணியை சந்தோஷ் தாக்க, பதிலுக்கு சந்தோசை சுப்பிரமணி தாக்க பின்னர் சுகுணாவும் சேர்ந்து சுப்பிரமணியை தாக்கி இருக்கிறார். தாயும் மகனும் சேர்ந்து சுப்பிரமணியை கடுமையாகத் தாக்கி கழுத்தையும் நெரித்து இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடி போலீஸில் புகார் அளிக்க சென்றிருக்கிறார் சுப்பிரமணி.

அப்போது போலீஸ் நிலையத்தின் வாசலில் ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்திருக்கிறார். இதை கண்ட போலீசார் அவரை மருத்துவமனைக்கு கொண்டு போய் உடனடியாக சேர்த்துள்ளனர் . அங்கு சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி உயிரிழந்துள்ளார். இதன் பின்னர் சுப்பிரமணி மரணத்திற்கு காரணம் குறித்த விசாரணையில் சந்தோஷ் அவரது தாய் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சிறுநீர் கழித்த விவகாரத்தில் ஒரு இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Contact Us