மகளின் காதல் திருமணத்துக்கு உடந்தையாக இருந்த மனைவி: போட்டுத் தள்ளிய கணவன்!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள அனிகுருந்தன் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம். முருகானந்தம் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி பூங்கோதை. இவர்களுக்கு அபிநயா என்ற மகள் இருந்துள்ளார். இவர் பரமக்குடி அருகே உள்ள சோமநாதபுரம் பகுதியை சேர்ந்த ரவி கிருஷ்ணன் என்பவருடன் காதல் வசப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

இதனை அறிந்த பூங்கோதை காதல் விஷயத்தை கணவருக்கு சொல்லாமல் தனது மகள் அபிநயாவை, ரவி கிருஷ்ணனுக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளார்.

இது குறித்த தகவல் கடந்த மாதம் முருகானந்ததிற்கு தெரிய வந்துள்ளது. இதனை அறிந்த முருகானந்தம் கடும் கோபத்துக்கு ஆளாகி உள்ளார். தனது மகளை தனக்குத் தெரியாமல் வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவருடன் திருமணம் செய்து வைத்த மனைவி பூங்கோதை மீது கடும் கோபத்தில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் சென்ற வாரம் வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்த முருகானந்தம் நடந்த விஷயங்களைப் பற்றி ஊரில் உள்ளவர்களிடம் விசாரித்துள்ளார். அப்போது தனது மகள் வேறு சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருடன் நெருங்கிப் பழகி வந்ததாகவும், அதனை உறவினர்கள் கண்டித்தும் அவர் கேட்கவில்லை எனவும், முருகானந்தத்தின் மனைவி பூங்கோதை அதற்கு ஆதரவு தெரிவித்து அவர்களுக்கு திருமணம் செய்து வைத்ததாகவும் அவரது சொந்தபந்தங்கள் கூறியுள்ளனர்.

இதனைக் கேட்ட முருகானந்தம் தனது குடும்ப கௌரவம் கெடுவதற்கு காரணம் தனது மனைவி பூங்கோதைதான் காரணம் என முடிவு செய்து அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார். இதற்காக அரிவாளுடன் கடந்த ஒரு வார காலமாக பூங்கோதையை பின்தொடர்ந்து சென்றுள்ளார்.

இந்நிலையில் பூங்கோதை தனது மகள் வீட்டிற்கு செல்வதற்காக சாலையில் நடந்து சென்றுள்ளார், இதனை மறைந்திருந்து கவனித்த முருகானந்தம் பூங்கோதையின் பின்னால் சென்று கையில் வைத்திருந்த அரிவாளால் மனைவி பூங்கோதையை சரமாரியாக வெட்டியுள்ளார், இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சாலையில் விழுந்த பூங்கோதை சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த பரமக்குடி எமனேஸ்வரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அரிவாளுடன் இருந்த முருகானந்தத்தை காவல் நிலையம் அழைத்து சென்றனர். பின்னர் அங்கிருந்த பூங்கோதையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனையில் வைத்தனர். மேலும் முருகானந்தத்தை கைது செய்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

தனது மனைவியை கணவனே நடுரோட்டில் வைத்து சரமாரியாக வெட்டி கொன்ற சம்பவம் பரமக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Contact Us