கொரோனா: சிங்கப்பூரில் ஆண்டுக்கு 2000 பேர் பலியாகக் கூடும் எனக் கணிப்பு

 

சிங்கப்பூரில் இனி வரும் காலங்களில் ஆண்டுதோறும் சுமார் இரண்டாயிரம் பேர் கோவிட்-19 பாதிப்பால் உயிரிழக்கக்கூடும் என அந்நாட்டின் சுகாதார மூத்த அமைச்சர் ஜனில் புதுச்சேரி தெரிவித்துள்ளார்.

மிகச்சிறந்த மருத்துவப் பராமரிப்பு உள்ள நாடு என்ற போதிலும், இத்தகைய நிலை ஏற்படக்கூடும் என்றும், இதைத் தவிர்க்க அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை புதிதாக மேலும் 3,496 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 204,340 ஆக கூடியுள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் அன்றாட பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தைக் கடந்தது. கொரோனா நெருக்கடி தொடங்கியது முதல் அங்கு பதிவான ஆக அதிகமான அன்றாட தொற்று எண்ணிக்கை இதுவாகும்.

இதையடுத்து, அங்கு கொரோனா கட்டுப்பாடுகள் மீண்டும் கடுமையாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அதிக தடுப்பூசி விகிதம், பூஸ்டர் தடுப்பூசிகள் போடுவது ஆகியவற்றில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக துணையமைச்சர் ஜனில் புதுச்சேரி தெரிவித்துள்ளார்.

மேலும், மிதமான வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்குவது, வலுப்படுத்துவது ஆகிய உத்திகளையும் சிங்கப்பூர் சுகாதார அமைச்சு கையாண்டு வருகிறது என்றார் அவர்.

Contact Us