மன நிலை சரியில்லாத தமிழன் நாகேந்திரனை தூக்கில் இட துடிக்கும் சிங்கப்பூர் அரசு- சர்வதேச கண்டனம் ..

கொரோனா தொற்றுப் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தமிழரான நாகேந்திரனுக்கு நாளை சிங்கப்பூரில் நிறைவேற்றப்பட இருந்த மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. அந்நாட்டில் மேல்முறையீட்டு நீதிமன்றம் இதற்கான உத்தரவை இன்று பிறப்பித்தது. ஹெராயின் போதைப் பொருளை சிங்கப்பூருக்குள் கடத்தி வந்த குற்றச்சாட்டின் பேரில் நாகேந்திரன் 2009ஆம் ஆண்டில் கைதானார். அதைத்தொடர்ந்து பத்து ஆண்டுகள் நடைபெற்ற வழக்கு விசாரணையின் முடிவில் அவருக்கு 2019ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் நாகேந்திரனுக்கு அறிவுசார் மனநல குறைபாடு இருப்பதாகவும், இதன் காரணமாக அவருக்கான தண்டனையை ரத்து செய்யும்படியும் அவரது தரப்பில் வலியுறுத்தப்பட்டது. 18 வயதுக்கும் கீழ் உள்ளவரின் மனநிலைதான் நாகேந்திரனுக்கும் உள்ளதா?

33 வயதான நாகேந்திரனுக்கு தற்போது 18 வயதுக்கும் கீழ் உள்ள ஒருவருக்கு இருக்கக்கூடிய மனநிலைதான் உள்ளது என்பது நாகேந்திரன் தரப்பின் வாதம். இப்படிப்பட்ட மனநிலையில் உள்ள, தமக்கு நேர இருப்பதை அறியும் பக்குவம் இல்லாத ஒருவரை தூக்கிலிடுவது என்பதை ஏற்க இயலாது என்ற வாதத்தையும் அவரது தரப்பு முன்வைத்துள்ளது. அனைத்துலக சட்டடங்களில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது என்பதுடன், சிங்கப்பூர் சிறைத்துறையிலும் கூட இத்தகைய மனநல குறைபாடு உள்ளவர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றத் தேவையில்லை எனும் துறை சார்ந்த ‘உள்கொள்கை’ இருப்பதாகவும் நாகேந்திரனின் வழக்கறிஞரான சிங்கப்பூரைச் சேர்ந்த ரவி வாதிட்டார்.

ஆனால் அவர் குறிப்பிட்டதைப் போன்று எந்த ‘உள்கொள்கை’யும் இல்லை என சிங்கப்பூர் சிறைத்துறை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. நாகேந்திரன் அறிவுசார் மனநலக் குறைபாடு உள்ளவர் என்பதை ஏற்க இயலாது என்று குறிப்பிட்ட அரசுத் தரப்பு, மூன்று ஆண்டுகள் அவருடன் தொடர்பில் இருந்த மூத்த சிறை அதிகாரி ஒருவரது வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இதை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்றம் நாகேந்திரன் தரப்பு மனுவை தள்ளுபடி செய்தது. நாகேந்திரனுக்கு உள்ள குறைபாடு தொடர்பாக அவரது வழக்கறிஞர் கூறுவதற்கு, குறிப்பாக 18 வயதுக்கும் கீழ் உள்ளவர்களின் மனநிலைதான் உள்ளது என்ற வாதத்துக்கு, ஆதாரம் ஏதுமில்லை என்று நீதிபதி சுட்டிக்காட்டினார்.

மேலும் வழக்கறிஞர் ரவி, மருத்துவ நிபுணத்துவம் உள்ளவரும் அல்ல என்றார் நீதிபதி. இதையடுத்து மரண தண்டனையை எதிர்த்து நாகேந்திரன் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை முடியும் வரை தண்டனையை ஒத்தி வைப்பதாகவும் அவர் அறிவித்தார். இதனால் நாகேந்திரன் குடும்பத்தார் தற்காலிக நிம்மதி அடைந்த நிலையில், மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என அறிவிப்பு வெளியானது. இது குறித்து நாகேந்திரனின் வழக்கறிஞர் தமது வியப்பை வெளிப்படுத்தினார்.

Contact Us