ஐ. நா. சபையின் உயர் பதவிக்கு போட்டியிட்ட கோட்டா அரசின் முக்கியஸ்தர் தோல்வி

ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச சட்ட ஆணைக்குழுவிற்கு இலங்கையின் சார்பில் போட்டியிட்ட முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தோல்வியடைந்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் வதிவிடப்பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள மொஹான் பீரிஸ், ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச சட்ட ஆணைக்குழுவிற்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக இலங்கை சார்பில் பரிந்துரைசெய்யப்பட்டிருந்தார்.

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் 2008 – 2011 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் சட்டமா அதிபராகவும் 2013ம் ஆண்டில் பிரதம நீதியரசராகவும் பதவிவகித்தவர் என்ற அடிப்படையில் பொறுப்புக்கூறலையும் நீதியையும் நிலைநாட்டத்தவறிய மொஹான் பீரிஸ், இனப்படுகொலைகள், போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் சர்வதேச சட்ட ஆணைக்குழுவிற்குப் பரிந்துரைக்கப்பட்டமை தொடர்பில் உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச செயற்திட்டம் கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தியிருந்தது.

அத்துடன், ஐ.நாவின் சர்வதேச சட்ட ஆணைக்குழுவிற்கு பிலிப்பைன்ஸ் சார்பில் ஹரி ரொக் மற்றும் இலங்கையின் சார்பில் மொஹான் பீரிஸ் ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டமையை நிராகரிக்குமாறு வலியுறுத்தி சமூகநீதி மற்றும் மனித உரிமைகளை வலுப்படுத்தும் நோக்கில் பிலிப்பைன்ஸைத் தளமாகக்கொண்டியங்கும் அமைப்பினால் விழிப்புணர்வுக் கலந்துரையாடல்களும் நடாத்தப்பட்டுவந்தன.

Contact Us