தந்தையின் பாலியல் தொல்லை – போலீசின் அராஜகம் : சென்னை சிறுமியின் அதிர்ச்சி ஆடியோ

தந்தையின் பாலியல் தொல்லையால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக 13 வயது சென்னை சிறுமி ஒருவர் குழந்தைகள் பாதுகாப்பு அவசர உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தனது வேதனையை தெரிவித்திருக்கிறார். அப்போது அச்சிறுமி பேசிய ஆடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை வானகரம் பகுதியில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது. வானகரம் பகுதியில் வசித்து வரும் அந்த 34 வயது பெண் தனது முதல் கணவர் இறந்து விட்டதால் கார் ஓட்டுநரான கற்பககனி என்பவரை கடந்த 2018-ஆம் ஆண்டு மறுமணம் செய்திருக்கிறார். முதல் கணவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், இரண்டாம் கணவருக்கு ஒரு குழந்தையும் பிறந்துள்ளது.

முதல் கணவருக்கு பிறந்த 13 வயது சிறுமியை கற்பகக்கனி அருகில் இருக்கும் ஏரிக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். இதனால் சிறுமி தனது தாயிடம் அழுதுகொண்டே நடந்ததை சொல்லியிருக்கிறார். இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் சிறுமியின் தாயார்.

புகாரின் பேரில் கற்பகக்கனி மீது காவல்துறையினர்போக்சோ பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வழக்குப்பதிவு செய்தும் கற்பகக் கனியை காவல்துறை கைது செய்யவில்லை. சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் சென்று கேட்டிருக்கிறார். விசாரணை நடத்த வேண்டும் என்றால் பணம் கொடுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். தன்னிடம் பணம் கொடுக்க வசதி இல்லை என்று சொல்ல, காவல் நிலையத்தை சுத்தம் செய்ய வைத்திருக்கிறார்கள்.

இதையடுத்து அந்த பெண் காவல் ஆணையரிடம், புகாரை விசாரிக்க பணம் கேட்டு பணம் கொடுக்க முடியாததால் காவல் நிலையத்தை சுத்தம் செய்ய வைத்தார்கள் என்று புகார் அளித்திருக்கிறார். அது குறித்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்திருக்கிறது.

இந்த நிலையில் கோவையில் பாலியல் தொல்லை கொடுத்ததால் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பின்னர் குழந்தைகள் பாலியல் சம்பந்தமான சந்தேகம் இருந்தால் உடனே குழந்தைகள் பாதுகாப்பு அவசர உதவி எண் 1098 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதை அடுத்து பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமி அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.

அந்த ஆடியோ தற்போது வெளியாகி அதிர வைத்திருக்கிறது. அதில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த இரண்டாவது தந்தை மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தும் கைது செய்யவில்லை என்பது ஏன் என தெரியவில்லை. இதனால் எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளார். இரண்டு முறை நீதிமன்றத்தின் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்தும் காவல்துறை அவரைக் கைது செய்யவில்லை.உடனடியாக அவரை கைது செய்ய வேண்டும். அவர் சென்னை பழவந்தாங்கல் பகுதியில் வேறு ஒரு பெண்ணுடன் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் சொன்னேன். அப்படி இருந்தும் கைது செய்யாமல் இருப்பது வேதனையளிக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். இந்த ஆடியோ வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலரும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர்.

Contact Us