புலிகளுக்கு எதிரான போர் தொடங்கும் முன் இங்கிலாந்து பிரதமரை சந்தித்த மஹிந்த!

சந்தஹிரு சேயாவின் மூலம் நினைவுகூரப்படும் போர்வீரர்களின் மனிதாபிமானப் பணியானது எமது வரலாற்றில் சுதந்திரத்திற்காக நடத்தப்பட்ட மிகக் கடினமான போர்களில் ஒன்றாக நான் கருதுகிறேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் நிர்மாணிக்கப்பட்ட சந்தஹிரு சேய தூபியை திறந்துவைக்கும் புண்ணிய நிகழ்வில் இன்று கலந்து கொண்டிருந்த போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

‘விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் தொடங்கும் முன் அப்போதைய இங்கிலாந்து பிரதமரை சந்தித்தது எனக்கு நினைவிருக்கிறது. விடுதலைப் புலிகளை நிராயுதபாணியாக்கி நாட்டில் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்று நான் கூறியபோது, அது சாத்தியம் என்று நான் நினைக்கவில்லை என்று கூறினார்.

அதைப் பற்றி சில விடயங்களைச் கூறினார். இந்த விவகாரம் ஏற்கனவே சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அப்போது அவர் கூறினார். சர்வதேச அளவில் பல நாடுகளின் பங்களிப்புடன் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இப்போது அதிலிருந்து விடுபட முடியாது என்று கூறினார். இரண்டாவது விடயம் புலிகளுக்கு ஏற்கனவே தனியான கட்டுப்பாட்டு பகுதிகள், தனி வங்கிகள் மற்றும் தனியான நிதிகள் உள்ளன. தனியான நிர்வாக அமைப்பு இருக்கிறது, அதுவரை நம் அரசாங்கங்கள் பார்த்துக் கொண்டிருந்துள்ளன.

தற்போது எதுவும் செய்வதற்கில்லை என்று தெரிவித்தார். மேலும் புலிகளுக்கு தற்கொலை குண்டுதாரிகளும் உள்ளனர். ஏவுகணைகள், பீரங்கிகள் உள்ளன. கப்பல்கள், போர் விமானங்கள் மற்றும் விமானங்கள் உள்ளன.

உங்களால் அவர்களை எதிர்கொள்ள முடியுமா என்று இங்கிலாந்து பிரதமர் அன்று என்னிடம் கேட்டார். உலகமே அவ்வாறு கூறிய போதும் எமது சொந்த மக்களின் பிள்ளைகளான எமது போர்வீரர்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தோம்.

எமது போர்வீரர்கள் ஈடு இணையற்ற தியாகத்தை செய்தனர். உலக வல்லரசுகள் கையெழுத்திட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தையும் கிழித்தெறிந்தோம். எமது போர்வீரர்களுக்கு எதிரான ஐ.நா தீர்மானத்தின் இணை அனுசரணையிலிருந்து நாம் தற்போது விலகியுள்ளோம்.

இவற்றின் தாக்கம் இப்போது நமக்கு எதிராக வருவதை நாம் அறிவோம். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக நமது சுதந்திரம் நமக்கு முக்கியம்.

இரத்த வெள்ளத்தை தடுத்து, மரண பயத்தை ஒழித்து, எமது நாட்டை புகலிடமாக்கிய போர் வீரர்களுக்காக இந்த சந்தஹிரு சேய தூபியை அமைத்து பிரார்த்திப்பது எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதிருக்கட்டும் என்ற பிரார்த்தனையிலாகும்.

நம் நாடு எவ்வளவு சிறியதாக இருந்தாலும், நமக்கு நம் நாட்டில் வாழ சுதந்திரம் இருக்க வேண்டும்.

நமது நாட்டின் சுதந்திரத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இராணுவ வீரர்களின் பாதுகாப்பையும், உயிர் தியாகத்தின் மூலம் இராணுவ வீரர்கள் எமக்கு உரிமையாக்கிய சுதந்திரத்தை பாதுகாப்பதனையும் எமது தலைவர்களும் எதிர்காலத்தில் உருவாகும் தலைவர்களும் பொறுப்பேற்க வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன் என அவர் தெரிவித்தார்.

Contact Us