20 வயதுடைய பெண் பாலியல் வல்லுறவு: ஓய்வுபெற்ற வடக்கின் முக்கிய இராணுவ அதிகாரி மீது குற்றச்சாட்டு…

பாணந்துறையில் உள்ள வீடொன்றில் வைத்து 20 வயதுடைய யுவதியொருவர் பாலியல் வன்புணர்விற்குள்ளாக்கப்பட்டதாக பாணந்துறை தெற்கு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வடமாகாணத்தில் முக்கிய பொறுப்பு வகித்த ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியினாலேயே யுவதி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாக 13ஆம் திகதி இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கள ஊடகங்களில் வெளியான செய்தியின்படி,

தந்திரிமலையை சேர்ந்த யுவதி, கடந்த ஓகஸ்ட் மாதம் இராணுவ அதிகாரி ஒருவரின் வீட்டில் பணிப்பெண்ணாக வேலையில் சேர்ந்தார். அப்போதிருந்து, வீட்டில் யாருமில்லாத பல சந்தர்ப்பங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக அவரது முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தந்தையை இழந்த அந்த யுவதியின், சகோதரர்களும், தாயும் வீட்டு பணியாளர்களாவே வேலை செய்வதாக தெரிவித்துள்ளார்.

சம்பவத்தின் பின்னர் கடந்த ஒக்டோபர் மாதம் வீட்டில் மயக்கமடைந்து விழுந்தார். அவர் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து, தந்திரிமலையிலிருந்து தாயார் அழைக்கப்பட்டு, அவருடன் வீட்டுக்கு அனுப்பப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

வீடு திரும்பிய தமக்கு கடுமையான தலைவலி ஏற்பட்டதால் அனுராதபுரம் பகுதியில் உள்ள அரச வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்ற போது, ​​விசாரணையின் போது இராணுவ அதிகாரியினால் தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து தெரிவித்துள்ளார்.

யுவதி வழங்கிய வாக்குமூலம் தொடர்பில் உரிய வைத்தியர் பொலிஸாருக்கும் அறிவித்துள்ளார். பாணந்துறை தெற்கு பொலிசாருக்கு விடயம் அறிவிக்கப்பட்டது.

இதன்படி, பாணந்துறை தெற்கு பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் யுவதியை பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து இராணுவ அதிகாரியின் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான மேலதிக விபரங்களை சேகரித்து, முறைப்பாடு பதிவு செய்திருந்தது.

யுவதியின் முறைப்பாட்டின் பிரகாரம் பாணந்துறை பிரதேச குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் நேற்று முன்தினம் (13) இராணுவ அதிகாரியின் வீட்டிற்கு உடனடியாக சென்று சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் அறையை சோதனையிட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தை மூடிமறைக்க பல்வேறு தரப்பினருக்கு அழுத்தம் கொடுத்து இராணுவ ஆதரவு சக்திகள் சம்பவத்தை மூடிமறைக்க முயற்சிப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாணந்துறை தெற்கு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Contact Us