விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளரை (SI) ஒருமையில் பேசி, கொடூரமாகத் தாக்கிய சம்பவம் தென்மாவட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாகப் புதிய தமிழகம் கட்சியின் ஒன்றிய செயலாளர் மாரிக்கண்ணன் உட்பட 8 பேர் மீது வெம்பக்கோட்டை காவல்துறையினர் பல்வேறு ஜாமீனில் வெளிவர முடியாத கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெம்பக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, புதிய தமிழகம் கட்சியின் சார்பில் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் அதிக ஒலியுடன் கூடிய சினிமா பாடல்கள் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில், கோயிலுக்கு அருகில் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துவதற்காகத் தங்கியிருந்த மற்றும் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த பெண் பக்தர்கள் சிலருக்கு, இந்த அதீத சினிமா பாட்டு சத்தம் கடுமையான இடையூறை ஏற்படுத்தியதாகத் தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் சிலர், புதிய தமிழகம் கட்சி நிர்வாகி மாரிக்கண்ணனிடம் சென்று பாடல்களின் ஒலியைக் குறைக்குமாறு கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மாரிக்கண்ணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள், நியாயம் கேட்க வந்த பெண்களைப் பொதுவெளியில் மிகக் கேவலமாக, அவதூறு வார்த்தைகளால் பேசி மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தங்களுக்குப் பாதுகாப்பு இல்லாததை உணர்ந்த பெண்கள், உடனடியாகக் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு (Police Control Room) அவசரத் தகவல் கொடுத்து உதவி கோரினர்.
பெண்களின் புகாரைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெம்பக்கோட்டை காவல் உதவி ஆய்வாளர் மாரிசன், அங்கு நிலவிய சட்டம் ஒழுங்கு பிரச்சனையைச் சீர்செய்ய முயன்றார். மாரிக்கண்ணன் தரப்பிடம் ஒலிபெருக்கியை அணைக்குமாறு அவர் எச்சரித்தபோது, போதையில் இருந்த அக்கும்பல் உதவி ஆய்வாளரை ஒருமையில் பேசி, பணி செய்ய விடாமல் தடுத்துக் கைகலப்பில் ஈடுபட்டுத் தாக்கியுள்ளது. போலீஸ் அதிகாரி மீதே ஆளுங்கட்சியினருக்கு இணையாகக் கட்சி நிர்வாகிகள் துணிச்சலாகத் தாக்குதல் நடத்தியுள்ள இந்த விவகாரம், விருதுநகர் மாவட்டக் காவல் வட்டாரத்தில் தற்பொழுது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.