Posted in

முதல்வர் விஜய் 3-ம் ரோம் மன்னர் கலிகுலாவை நினைவுபடுத்துகிறார்.. சட்டப்பேரவையை ஷூட்டிங் ஸ்பாட்டாக்காதீங்க! டிடிவி தினகரன் சாடல்!

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரின் இறுதி நாளில், ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பதிலளித்துப் பேசினார். மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த உரை, வெறும் ஆவேசம், ஆக்ரோஷம், நக்கல் மற்றும் நையாண்டி நிறைந்த புளித்துப்போன சினிமா வசனங்களின் தொகுப்பாகவே இருந்தது என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். முதலமைச்சர் விஜய்யின் இந்த 40 நாள் ஆட்சி நிர்வாகப் போக்கு, உலக வரலாற்றில் கொடுங்கோலனாக அறியப்படும் மூன்றாம் ரோம் மன்னர் கலிகுலாவின் (Caligula) தன்னிச்சையான ஆட்சியைத் தனக்கு நினைவுபடுத்துவதாக அவர் சாடியுள்ளார்.

இதுதொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில், முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தையே ஒரு ஷூட்டிங் ஸ்பாட்டாக மாற்றி, சினிமாவில் பேசுவது போல அடுக்கு வசனங்களை பேசி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்த பாணி வசனங்கள் சமூக ஊடகங்களில் ‘ரீல்ஸ்’ போடுவதற்கு மட்டுமே பயன்படுமே தவிர, தமிழக மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு எந்தவொரு தீர்வையும் தராது என்று சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், தேர்தலுக்கு முன்பு தவெக வெளியிட்ட வாக்குறுதியான பயிர்க்கடனை முழுமையாக நிறைவேற்றக் கோரிப் போராடும் விவசாயிகளை, எதிர்க்கட்சிகளின் தூண்டுதலால் போராடுவதாக முதலமைச்சர் விஜய் கூறியிருப்பது ஒட்டுமொத்த விவசாயப் பெருங்குடி மக்களையும் கொச்சைப்படுத்தும் செயல் என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள தினகரன், ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக முந்தைய அரசைப் போதைப்பொருள் நடமாட்டத்திற்காக விமர்சித்த விஜய், தற்போதைய 40 நாள் ஆட்சியில் அதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தார் என்று கேள்வி எழுப்பியுள்ளார். முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் அவர் கையெழுத்திட்ட போதைப்பொருள் தடுப்புப் படை தற்போது தூங்கிக் கொண்டிருக்கிறதா என்றும், மாநிலத்தில் அன்றாடம் நடக்கும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைக் கட்டுப்படுத்தாமல், நடிகர் வடிவேலுவின் “திரும்பத் திரும்ப பேசுற நீ” என்ற நகைச்சுவை பாணியில் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் “கால அவகாசம்” கேட்பது தனது பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் செயல் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

மேலும், தேர்தல் வாக்குறுதியில் மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம் என்று அறிவித்துவிட்டு, தற்போது இரண்டு மாதங்களுக்குச் சேர்த்து 200 யூனிட் என்று மாற்றி அறிவித்துவிட்டு, ஏதோ பெரிய சாதனையைச் செய்துவிட்டது போல் முதலமைச்சர் விஜய் சிலாகித்துப் பேசுவது ஏமாற்று வேலை என்றும் தினகரன் சாடியுள்ளார். குதிரை பேரம் நடத்தி, ஆட்சி அதிகாரப் பங்கீடு என்ற ஆசை வார்த்தைகளைக் கூறி, மாற்றுக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களைத் தட்டித் தூக்கி, அவர்களை ராஜினாமா செய்ய வைத்ததுதான் விஜய் பேசும் ஜனநாயகமா என்றும், “ஊழல் செய்யத் தெரியாது” என்று மார்தட்டும் விஜய்யின் தவெக நிர்வாகிகளுக்கு 40 நாட்களில் தெரிந்த லஞ்ச முறைகேடுகளைத் தாம் விரைவில் நினைவூட்டப் போவதாகவும் டிடிவி தினகரன் தனது அறிக்கையில் மிக ஆக்ரோஷமாக எச்சரித்துள்ளார்.