தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பதிலளித்துப் பேசியபோது, சினிமா பாணியில் குட்டி ஸ்டோரி மற்றும் பஞ்ச் டயலாக் பேசிய விவகாரம் இன்னும் ஓயவில்லை. ஏற்கனவே திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் முதலமைச்சரின் இந்த போக்கை கடுமையாக விவாதித்து வரும் நிலையில், தற்போது பாஜக மாநிலத் தலைவர் நைனார் நாகேந்திரனும் முதலமைச்சரின் இத்தகைய சினிமாத்தனமான செயல்பாடுகளுக்கு மிகக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். சட்டமன்ற நிகழ்வுகள் அனைத்தும் முழுமையாக நேரலை செய்யப்பட்டு வரும் சூழலில், முதலமைச்சர் அவையின் புனிதத்தை உணர்ந்து பேச வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நைனார் நாகேந்திரன், “முதலமைச்சர் விஜய் இன்னும் தான் ஏதோ சினிமாவில் நடித்துக் கொண்டிருப்பதாகவே நினைத்துக் கொண்டு சட்டமன்றத்தில் அமர்ந்து கொண்டிருக்கிறார். சட்டமன்றத்திற்கு என்று சில விதமுறைகளும், மரபுகளும் உள்ளன; அதை மீறி இஷ்டத்திற்கு சினிமாத்தனம் செய்யக்கூடாது என்று அவருக்கு தெரிய வேண்டும். இதற்கு முன்பு அவையில் இதுபோன்று சினிமா பாணியில் வசனம் பேசி நடந்து கொண்டவர்களின் அரசியல் நிலைமை என்ன ஆனது என்பது தற்பொழுது உங்களுக்கே நன்றாகத் தெரியும்” என்று கடந்த கால அரசியல் வரலாற்றைச் சுட்டிக்காட்டி மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் பேசிய அவர், முதலமைச்சர் விஜய் இனிமேலாவது தனது தகுதியை அறிந்து, அதற்கேற்ப ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக சட்டமன்றத்தின் பாரம்பரிய மரபுகளோடு கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். சட்டமன்றத்தை ஒரு ‘சூட்டிங் ஸ்பாட்’ போல மாற்றி வெறும் கைதட்டல்களுக்காக வசனம் பேசுவது தமிழகத்தின் அரசியல் முதிர்ச்சிக்கு நல்லதல்ல என்றும், மக்கள் சந்திக்கும் அத்தியாவசியப் பிரச்சினைகளான மின்வெட்டு, விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்துப் பேசாமல் முதலமைச்சர் கதைகளைக் கூறி தப்பித்துக் கொள்கிறார் என்றும் பாஜக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நைனார் நாகேந்திரனின் இந்த விமர்சனத்திற்கு தவெக தரப்பில் இருந்து ஆக்ரோஷமான பதிலடிகள் வரத் தொடங்கியுள்ளன. பழைய வெற்று அரசியல் மரபுகளை உடைத்து, எளிய மக்களுக்கும் புரியும் வகையில் முதலமைச்சர் விஜய் யதார்த்தமாகப் பேசுவதை எதிர்க்கட்சிகளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று தவெக தகவல் தொழில்நுட்ப அணியினர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். சட்டமன்றத்தில் தொடங்கிய ‘குட்டி ஸ்டோரி’ விவாதம் தற்பொழுது திமுக, அதிமுகவைத் தாண்டி பாஜகவிற்கும் பரவி தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதப் புயலைக் கிளப்பியுள்ளது.