Posted in

கெஸ்டபோவால் தூக்கிலிடப்பட்ட யூத வரலாற்றாசிரியரை, பிரான்ஸ் பாந்தியோனில் நல்லடக்கம்

இரண்டாம் உலகப் போரின் போது நாஜி ஜெர்மனியின் ரகசிய போலீசான கெஸ்டாபோவால் (Gestapo) கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பிரான்சின் புகழ்பெற்ற யூத வரலாற்று அறிஞரும், சுதந்திரப் போராட்ட வீரருமான மார்க் ப்ளோக் (Marc Bloch), பிரான்சின் மிக உயரிய தேசிய நினைவகமான பான்தியோனில் (Panthéon) முறைப்படி அடக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மறைந்து 82 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள சூழலில், பாரிஸில் உள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மதச்சார்பற்ற தேசிய நினைவிடத்தில் மார்க் ப்ளோக்கின் தியாகத்தைப் போற்றும் பிரம்மாண்ட அரசு விழா பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தலைமையில் நடைபெற்றது. இதன் மூலம் பிரான்சின் ஐந்தாவது குடியரசு வரலாற்றில் பான்தியோன் நினைவகத்திற்குள் நுழையும் முதல் வரலாற்று ஆசிரியர் என்ற பெருமையை மார்க் ப்ளோக் பெற்றுள்ளார்.

மத்திய கால வரலாற்றில் (Medieval History) உலகப் புகழ்பெற்ற நிபுணரான மார்க் ப்ளோக், சமூகவியல், பொருளாதாரம் மற்றும் உளவியல் ரீதியான புதிய அணுகுமுறைகளை புகுத்தி பிரெஞ்சு வரலாற்று ஆராய்ச்சிக் கட்டமைப்பையே புரட்டிப் போட்டவர் ஆவார். முதலாவது உலகப் போரிலும் பங்கேற்று வீர விருதுகளைப் பெற்றிருந்த அவர், 1939-ல் இரண்டாம் உலகப் போர் வெடித்தபோது தனது 53-வது வயதிலும் நாட்டின் பாதுகாப்பிற்காக மீண்டும் ராணுவத்தில் சேர்ந்தார். இருப்பினும், பிரான்சில் நாஜிக்களின் ஆதரவோடு அமைந்த ‘விச்சி’ (Vichy) ஆட்சியின் யூத எதிர்ப்புச் சட்டங்களால் அவரது குடியுரிமை பறிக்கப்பட்டு, அவரது வீடும் நூலகமும் நாஜிக்களால் ஆக்கிரமிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து 1943-ல் நாஜிக்களுக்கு எதிரான பிரெஞ்சு எதிர்ப்பு இயக்கத்தில் (French Resistance) மார்க் ப்ளோக் ரகசியமாகத் தன்னை இணைத்துக் கொண்டார். ஆனால், 1944 மார்ச் 8 அன்று லியோன் நகரில் வைத்து கெஸ்டாபோ அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார். “லியோனின் கசையடி மன்னன்” என்று அழைக்கப்பட்ட கிளாஸ் பார்பியின் நேரடி உத்தரவின் கீழ் சிறையில் மிகக் கொடூரமான சித்திரவதைகளை அசாத்திய தைரியத்துடன் எதிர்கொண்ட அவர், நேச நாட்டுப் படைகள் நார்மண்டியில் தரையிறங்கிய 10 நாட்களுக்குப் பிறகு, 1944 ஜூன் 16 அன்று 29 போராட்ட வீரர்களுடன் சேர்த்து ஒரு வெட்டவெளியில் சுட்டுக் கொல்லப்பட்டார். துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த கணத்திலும் “பிரான்ஸ் வாழ்க!” (Vive la France) என்று அவர் முழக்கமிட்டது வரலாற்றில் பதிவாகியுள்ளது.

அவரது குடும்பத்தினரின் விருப்பப்படி மார்க் ப்ளோக்கின் உண்மையான உடல் பிரான்சின் கிராமப்புறக் கல்லறையிலேயே நீடிக்கும் சூழலில், அவரது பதக்கங்கள் மற்றும் வரலாற்று ஆவணங்கள் அடங்கிய ஒரு குறியீட்டு சவப்பெட்டி (Symbolic Casket) மற்றும் அவரது மனைவி சிமோன் விடாலின் நினைவுகள் அடங்கிய மற்றொரு பெட்டி ஆகியவை ராணுவ மரியாதையுடன் பான்தியோனில் நிறுவப்பட்டன. இந்த நிகழ்வில் பேசிய அதிபர் மேக்ரான், மார்க் ப்ளோக்கை “நூற்றாண்டின் சிந்தனையாளர்” என்றும், நாஜிக்களுக்குப் பணிந்துபோன பிரெஞ்சு அதிகார வர்க்கத்தின் “தோல்வி மனப்பான்மையை” அன்றே தனது புத்தகத்தில் சாடிய மார்க் ப்ளோக்கின் தார்மீகக் தைரியம் இன்றும் பொதுவாழ்விற்குத் தேவை என்றும் புகழாரம் சூட்டினார்.