இங்கிலாந்து எல்லையில் இருந்து வெறும் 30 மைல் தொலைவில் வட பிரான்ஸின் டன்கிர்க் (Dunkirk) பகுதி அருகே அமைந்துள்ள ‘கிராவலின்ஸ்’ (Gravelines) அணுமின் நிலையத்தில், எதிர்பாராத விதமாக ஆயிரக்கணக்கான ஜெல்லிமீன்கள் (Jellyfish Swarm) ஒரே நேரத்தில் குளிரூட்டும் வடிகட்டிகளுக்குள் நுழைந்ததால் 3 அணு உலைகள் உடனடியாக முடக்கப்பட்டன. மேற்கு ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையங்களில் ஒன்றான இங்கு நடைபெற்ற இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
அணு உலைகளின் வெப்பத்தைக் தணிப்பதற்காக வட கடலிலிருந்து (North Sea) கடல்நீர் உறிஞ்சப்பட்டுப் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், எதிர்பாராத விதமாக லட்சக்கணக்கான ஜெல்லிமீன்கள் உறிஞ்சு குழாய்கள் வழியே நுழைந்து, நீர் வடிகட்டும் டிரம்ஸ்களை அடைத்துக் கொண்டன. இதனால் அணு உலைகளுக்குச் செல்லும் நீர் விநியோகம் தடைபடவே, அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் நோக்கில் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு அமைப்புகள் தானியங்கி முறையில் இயங்கி 3 அணு உலைகளை முற்றிலும் முடக்கின.
இந்தச் சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அணுமின் நிலையத்தைப் பராமரிக்கும் ஈடிஎஃப் (EDF) நிறுவனம், “ஜெல்லிமீன்களின் திடீர் ஊடுருவலால் 2, 3 மற்றும் 4 ஆகிய எண்களைக் கொண்ட 3 அணு உலைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் 1-வது அணு உலையின் மின் உற்பத்தி 50 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்தத் திடீர் முடக்கத்தால் பொதுமக்களின் பாதுகாப்பிற்கோ, ஊழியர்களுக்கோ அல்லது சுற்றுச்சூழலுக்கோ எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்றும், வடிகட்டிகளைச் சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் ஈடிஎஃப் தெளிவுபடுத்தியுள்ளது.
பருவநிலை மாற்றம் காரணமாகக் கடல் நீரின் வெப்பநிலை அதிகரிப்பது மற்றும் கடல்சார் சமநிலையின்மை போன்றவற்றால் அட்லாண்டிக் மற்றும் வட கடல் பகுதிகளில் ஜெல்லிமீன்களின் பெருக்கம் அண்மைக்காலமாகப் பெருமளவு அதிகரித்து வருகிறது. மனிதர்களின் சிறு தவறு இல்லாமல், வெறும் மெல்லிய உடலமைப்பைக் கொண்ட ஜெல்லிமீன்கள் படையெடுத்து ஐரோப்பாவின் பிரம்மாண்டமான அணுமின் நிலையத்தையே ஸ்தம்பிக்க வைத்த நிகழ்வு அறிவியல் அறிஞர்களையும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.