கடந்த ஆண்டு கரூரில் நடைபெற்ற தவெக மாநாட்டு பிரச்சாரப் பொதுக்கூட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியது. இந்த விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினரை, ஜூலை இரண்டாவது வாரத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் சென்று சந்திக்க திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்குப் பிறகு, முதலமைச்சர் விஜய் அதிகாரப்பூர்வமாக கரூருக்கு நேரில் சென்று மக்களைச் சந்திப்பது இதுவே முதல்முறை என்பதால் அரசியல் வட்டாரத்தில் இது பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
முன்னதாக, விபத்து நடந்த 40 நாட்களுக்குள் பாதிக்கப்பட்ட குடும்பங்களை கரூரில் உள்ள குறுகிய தெருக்கள் மற்றும் பாதுகாப்பு காரணங்களால் அங்கு சென்று சந்திக்க முடியாத சூழல் நிலவியது. இதனால், கடந்த அக்டோபர் மாதம் சென்னை மகாபலிபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதிக்கு பாதிக்கப்பட்ட சுமார் 37-க்கும் மேற்பட்ட குடும்பங்களை வரவழைத்து, அவர்களுக்கு தலா ரூ. 20 லட்சம் நிதியுதவி வழங்கி, தனித்தனியாக முதலமைச்சர் விஜய் ஆறுதல் கூறியிருந்தார். எனினும், அவர் ஏன் இன்னும் கரூருக்கு நேரில் வரவில்லை என்ற விமர்சனங்களும், சிபிஐ விசாரணை தொடர்பான நீதிமன்ற நகர்வுகளும் தொடர்ந்து எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்பட்டு வந்தன.
தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்த பிறகு, தொடர்ச்சியான சட்டப்பேரவை நிகழ்வுகள், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் மற்றும் பல்வேறு துறை சார்ந்த ஆலோசனைக் கூட்டங்கள் என முதலமைச்சர் தீவிரப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். தற்போது இந்த முதற்கட்ட நிர்வாகப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள சூழலில், கரூரில் உள்ள விபத்து பகுதிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் இல்லங்களுக்கு நேரடியாகச் செல்ல அவர் முடிவெடுத்துள்ளார். கடந்த முறை சென்னைக்கு வர முடியாத சில குடும்பங்களையும், விபத்தில் காயமடைந்தவர்களையும் அவர்களது இருப்பிடத்திற்கே சென்று சந்தித்து ஆறுதல் கூறுவதே இந்த பயணத்தின் முக்கிய நோக்கம் என்று கூறப்படுகிறது.
இந்த அதிகாரப்பூர்வ கரூர்ப் பயணத்தின் மூலம், கடந்த ஓராண்டாக தவெக மற்றும் முதலமைச்சர் விஜய் நோக்கி வீசப்பட்ட அரசியல் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் நேரடியாகச் சென்று அவர்களின் தற்போதைய வாழ்வாதார நிலைமைகளைக் கேட்டறிந்து, அரசு மற்றும் கட்சி ரீதியாகத் தேவையான கூடுதல் உதவிகளை வழங்கவும் முதலமைச்சர் தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஜூலை இரண்டாவது வாரத்தில் இதற்கான விரிவான பயண அட்டவணை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.