தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைமையிலான புதிய ஆட்சி அமைந்து சில வாரங்களே ஆன நிலையில், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அதிரடி அமைச்சரவை மாற்றத்திற்குத் தயாராகி வருவதாகக் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உளவுத்துறை மற்றும் பிரத்தியேகக் குழுக்கள் மூலம் ஒவ்வொரு அமைச்சரின் செயல்பாடுகளையும் முதலமைச்சர் அலுவலகம் (CMO) ரகசியமாகக் கண்காணித்து அறிக்கை பெற்றுள்ளது. இதில் தென்மாவட்டங்களைச் சேர்ந்த சில அமைச்சர்கள் மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல் தங்களுக்குள் ‘யார் பெரியவர்’ என்ற அதிகாரப் போட்டியில் ஈடுபட்டு வருவதும், சில அமைச்சர்கள் தங்களின் துறைகளில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் பந்தா காட்டுவதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஏற்கனவே, அமைச்சர் சரத்குமார் மீதான பழைய வீடியோ விவகாரத்தை கையில் எடுத்து எதிர்க்கட்சியான திமுக பெரிய போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், செயல்திறன் (Performance) இல்லாத அமைச்சர்களை நீக்கிவிட்டு ஜெயலலிதா பாணியில் அதிரடி மாற்றங்களைச் செய்ய சபாநாயகர் மற்றும் முக்கிய அமைச்சர்களுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தியுள்ளார்.
மற்றொருபுறம், அதிமுகவிலிருந்து விலகி விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்துள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரை தவெக-வில் இணைப்பதற்கு கட்சிக்குள்ளேயே பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. “நாம் ஊழலுக்கும் போதைக்கும் எதிராகப் பேசி ஆட்சிக்கு வந்தவர்கள்; தற்பொழுது குட்கா வழக்கில் சிக்கிய விஜயபாஸ்கரை கட்சியில் சேர்த்தால் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு நாமே ‘கண்டென்ட்’ கொடுத்ததாக ஆகிவிடும்” என்று அமைச்சர்கள் பர்வேஸ், அருண்ராஜ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் முதலமைச்சரிடம் நேரடியாகவே தங்களின் அப்ஜெக்ஷனைப் பதிவு செய்துள்ளனர். இருப்பினும், விஜயபாஸ்கர் தவெக-வில் இணைவது உறுதி என்றே அவரது ஆதரவாளர்கள் நம்புகின்றனர். இதேபோல் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அதிமுக அமைச்சர் ஒருவரும் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைய அப்ளிகேஷன் போட்டு காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பதவிக்காலம் வரும் அக்டோபர் மாதத்துடன் முடிவடைய உள்ளதால், அந்தப் பதவியைப் பிடிக்க முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் டெல்லியில் தீவிர காய்களை நகர்த்தி வருகிறார். அடுத்த ஆண்டு உத்தரப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட 7 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் வரவுள்ளதால், தேர்தலைத் தள்ளிவைத்துவிட்டு தற்காலிகத் தலைவராகப் பொறுப்பேற்க அசோக் கெலாட், சித்தராமையா ஆகியோருடன் சிதம்பரத்தின் பெயரும் பரிசீலனையில் உள்ளது. இதற்காக இந்தியா (I.N.D.I.A) கூட்டணித் தலைவர்களின் ஆதரவைத் திரட்டி வரும் சிதம்பரம், தமிழ்நாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் முதலமைச்சர் விஜய் ஆகிய இருவரையும் ரகசியமாகச் சந்தித்துப் பேசியுள்ளார். ‘பாஜகவை வீழ்த்த விஜய்-ஸ்டாலின் ஃபார்முலா’ போல அனைத்து மாநிலங்களிலும் மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைத்துச் செயல்படுவேன் என சிதம்பரம் வாக்குறுதி அளித்து வருகிறார்.
அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியிலும், மாணவர்களுக்கான தனது சமூகப் பணிகளை முதலமைச்சர் விஜய் கைவிடவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளாகத் தனது சொந்தச் செலவில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு சாதனையாளர்களுக்குக் கல்வி விருது வழங்கி வந்த விஜய், இந்த ஆண்டும் தவெக சார்பில் பிரம்மாண்ட விழாவிற்குத் திட்டமிட்டுள்ளார். கடந்த ஆண்டு மாமல்லபுரத்தில் பல கட்டங்களாக நடந்த இந்த விழாவை, இந்த முறை சென்னைக்குள்ளேயே ஒரே நாளில் ஒரே கட்டமாக நடத்தி முடிக்க மாவட்டச் செயலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஜூலை இரண்டாவது வாரத்தில் திட்டமிடப்பட்டுள்ள இந்த கல்வி விருது வழங்கும் விழா, முதலமைச்சரின் கரூர் மற்றும் பறந்தூர் விமான நிலைய விசிட்டுகளுக்கு முன்னதா அல்லது பின்னதா என்பது குறித்த இறுதி அட்டவணையை அதிகாரிகள் தற்பொழுது தயார் செய்து வருகின்றனர்.