Posted in

நாளை முதல் உங்கள் செலவு அதிகரிக்கும்… பாஸ்போர்ட் முதல் வாகனங்கள் வரை புதிய விதிகள்!

புதிதாகப் பிறக்கவிருக்கும் ஜூலை மாதத் தொடக்கமான நாளை (புதன்கிழமை) முதல், சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கையோடு தொடர்புடைய மிக முக்கியமான ஐந்து சேவைகளில் அதிரடி மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி ஆதார் அட்டை, பாஸ்போர்ட் விண்ணப்பம், புதிய வாகனங்களின் விலை, கிரெடிட் கார்டு பயன்பாடு மற்றும் எரிபொருள் விநியோகம் ஆகிய துறைகளில் இந்த புதிய விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன. இந்த மாற்றங்கள் பொதுமக்களின் மாதாந்திர பட்ஜெட்டிலும், சேவைகளைப் பெறும் வழிமுறைகளிலும் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இதுகுறித்த விழிப்புணர்வுடன் இருப்பது அவசியமாகிறது.

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆதார் பயனாளர்களுக்கு ஒரு புதிய சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி, ஆதார் எண்ணுடன் இ-மெயில் முகவரியை (E-mail ID) இணைக்க இதுவரை வசூலிக்கப்பட்டு வந்த 75 ரூபாய் கட்டணம் நாளை முதல் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. பொதுமக்கள் வரும் டிசம்பர் 31-ஆம் தேதி வரை எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாகத் தங்களின் மின்னஞ்சல் முகவரியை ஆதாரில் புதுப்பித்துக் கொள்ளலாம். அதே நேரத்தில், வெளிநாடுகளுக்குச் செல்வோர் பயன்படுத்தும் பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டணம் நாளை முதல் பெருமளவு உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண பாஸ்போர்ட் கட்டணம் 1,500 ரூபாயில் இருந்து 2,500 ரூபாயாகவும், தட்கல் (Tatkal) முறையில் விண்ணப்பிப்பதற்கான கட்டணம் 3,500 ரூபாயில் இருந்து 5,000 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சொந்தமாகப் புதிய கார் அல்லது இருசக்கர வாகனங்கள் வாங்கத் திட்டமிட்டிருப்பவர்களுக்கும் நாளை முதல் கூடுதல் செலவு காத்திருக்கிறது. முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதைக் காரணம் காட்டி, தனிநபர் பயன்பாட்டு வாகனங்களின் விலையை 1.5 சதவீதம் முதல் 3 சதவீதம் வரை உயர்த்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. இதுதவிர, கிரெடிட் கார்டு (Credit Card) விதிகளிலும் கடிவாளம் போடப்பட்டுள்ளது. சில குறிப்பிட்ட ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கான ரிவார்டு புள்ளிகள் (Reward Points) ரத்து செய்யப்படுவதோடு, உள்நாட்டு விமான நிலையங்களின் சொகுசு தங்கும் அறைகளை (Lounge Access) இலவசமாகப் பயன்படுத்த, சம்பந்தப்பட்ட கார்டுதாரர்கள் ஒவ்வொரு காலாண்டிலும் குறைந்தபட்சம் 60,000 ரூபாய் செலவிட்டிருக்க வேண்டும் என்ற புதிய வரம்பும் விதிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு முக்கிய அறிவிப்பாக, பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை மீதான தற்காலிகக் கட்டுப்பாடுகளை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை நாளை முதல் முழுமையாகத் திரும்பப் பெறுகிறது. கடந்த ஜூன் 12-ஆம் தேதி பொதுமக்களின் நலன் மற்றும் விநியோகச் சங்கிலியை ஒழுங்குபடுத்துவதற்காகப் பிறப்பிக்கப்பட்டிருந்த தற்காலிகக் கட்டுப்பாடுகள் மற்றும் ஆய்வுகள் தற்பொழுது விலக்கிக் கொள்ளப்படுவதால், எரிபொருள் விநியோகம் மற்றும் விற்பனை நாடு முழுவதும் எவ்வித தடையுமின்றி வழக்கம் போல் சீராக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.