Posted in

வைகோ இப்போது விஜய் காலடியில்! – நாஞ்சில் சம்பத்தின் அதிரடி பேச்சு!

தமிழக அரசியல் களத்தில் முன்னணி மேடைப் பேச்சாளரும், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரச்சாரச் செயலாளருமான நாஞ்சில் சம்பத், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை இலக்கு வைத்துப் பேசிய பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரத்தில் நடைபெற்ற தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்றுப் பேசிய அவர், வைகோ உள்ளிட்ட பல்வேறு எதிர்கட்சித் தலைவர்களைக் கடுமையாகச் சாடினார்.

விழாவில் ஆவேசமாக உரையாற்றிய நாஞ்சில் சம்பத், “தமிழ்நாட்டில் அரசியல் மாற்றத்திற்கு அன்று அகரமிட்ட வைகோ, இன்றைக்குத் தவெக தலைவர் விஜய் காலடியில் வந்து விழுந்து கிடக்கிறார்” என்று காரசாரமாகக் குற்றம் சாட்டினார். இந்திய அரசியல் வரலாற்றிலேயே ஒரு கட்சி தொடங்கி மிகக் குறைந்த காலத்திற்குள் ஆட்சியைக் கைப்பற்றி விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றது மிகப்பெரிய அதிசயம் என்றும், அவரது இந்த வேகமான அரசியல் எழுச்சியைக் கண்டு பொறாமை கொண்டு ஆட்சியை வீழ்த்தப் பல்வேறு தரப்பினர் சதி செய்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், தவெக சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கவும், கட்சியின் பெரும்பான்மையைச் சிதைக்கவும் அண்ணா அறிவாலயத் தரப்பில் திட்டமிடப்படுவதாகச் சாடினார். “திமுக எத்தனை கோடிகளைக் கொடுத்தாலும் தவெகவின் தொண்டர்களையோ, எம்.எல்.ஏ-க்களையோ ஒருபோதும் விலைக்கு வாங்க முடியாது” எனக் குறிப்பிட்ட அவர், திமுக ஆட்சிக்காலத்தில் மக்கள் பணத்தில் கோடிக்கணக்கில் விளம்பரம் மட்டுமே செய்யப்பட்டது என்றும், தவெக அரசு விளம்பரங்களை நம்பி இயங்கவில்லை என்றும் விமர்சித்தார்.

மேலும், தேமுதிகவை திமுகவிடம் குத்தகைக்கு விட்டுவிட்டதாகப் பிரேமலதாவையும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் டார்ச் லைட்டை அறிவாலயத் திண்ணையில் தேடுவதாகக் கமல்ஹாசனையும் தன் பாணியில் கிண்டல் செய்தார். தவெகவின் கொள்கை விளக்கப் பரப்புரைகள் தீவிரமடைந்து வரும் வேளையில், ஆரம்பக் காலத்தில் தனது அரசியல் வழிகாட்டியாக இருந்த வைகோவையே நாஞ்சில் சம்பத் இவ்வாறு மேடையில் போட்டுடைத்துப் பேசியிருப்பது, மதிமுக மற்றும் கூட்டணி வட்டாரங்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.