அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள அரசு கட்டிடங்கள், வரலாற்றுச் சின்னங்கள் மற்றும் புதிதாகக் கட்டப்படும் அரங்கங்களுக்குத் தனது பெயரைச் சூட்டி வருவது குறித்த சர்ச்சைகளுக்குப் பதில் அளித்துள்ளார். “நான் பதவி விலகிய பின்னரோ அல்லது மறைந்த பின்னரோ எவரும் எனக்கு நினைவுச் சின்னங்களைக் கட்டப் போவதில்லை; அதனால் தான் நானே இவற்றைச் செய்கிறேன்” என ‘நியூயார்க் மேகசின்’ நாளிதழுக்கு அளித்த பேட்டியில் டிரம்ப் ஓபனாக ஒப்புக்கொண்டுள்ளார்.
முன்னதாக, ஜனநாயகக் கட்சியின் செனட்டர் ஜான் ஓசாஃப் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள், “டிரம்ப் தோல்வியடைந்த ஒரு தலைவராகத் திகழ்வதால், அவர் இருக்கும் போதே தனக்குத்தானே நினைவிடங்களைக் கட்டிக் கொள்கிறார்; அவர் மறைந்த பின் எவரும் அவரைக் கௌரவிக்க மாட்டார்கள்” எனக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தனர். இந்த விமர்சனம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கே பதிலளித்த டிரம்ப், “அவர்கள் சொல்வது உண்மைதான்; நான் இங்கிருந்து சென்ற பிறகு வேறு எவரும் இதைச் செய்ய மாட்டார்கள், அதனால்தான் மக்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்” எனக் கூறினார்.
டிரம்பின் இரண்டாவது அதிபர் பதவிக்காலத்தில், வெள்ளை மாளிகையின் கிழக்கு பகுதியில் தங்கம் பூசப்பட்ட புதிய பிரம்மாண்ட நடன அரங்கம் (Ballroom), அமெரிக்க அமைதி நிறுவனத்தின் பெயர் மாற்றம் மற்றும் கென்னடி சென்டர் பெயர் மாற்றம் போன்ற பல்வேறு சர்ச்சைக்குரிய திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதுமட்டுமன்றி, ‘டிரம்ப்-கிளாஸ்’ போர்க்கப்பல்கள் மற்றும் அதிபர் டிரம்பின் பெயர் தாங்கிய விமானம் வரை பல அமைப்புகளுக்குத் தனது பெயரை வைப்பதில் அவர் தீவிரம் காட்டி வருகிறார்.
வரலாற்றுச் சிறப்புமிக்கக் கட்டிடங்களின் பாரம்பரியத்தைச் சீர்குலைப்பதாக வரலாற்று ஆய்வாளர்களும் ஜனநாயகக் கட்சியினரும் இதற்கெதிராகப் பல்வேறு வழக்குகளைத் தொடர்ந்துள்ளனர். இருப்பினும், “பொதுமக்கள் எனது சாதனைகளுக்காக நன்றி தெரிவிக்க வேண்டும்” எனக் கூறியுள்ள டிரம்ப், தனது அதிகாரப்பூர்வப் மரபைப் (Presidential Legacy) பாதுகாப்பதற்காகவே இத்தகைய பிரம்மாண்டப் பணிகளை அதிவேகமாகச் செய்து முடிப்பதாகத் தெரிவித்துள்ளார்.