புதுக்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஒருங்கிணைந்த புதுக்கோட்டை மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில், நிர்வாகிகள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கூச்சல் குழப்பம் நிலவியது. உட்கட்சி மறுசீரமைப்பு தொடர்பான ஆலோசனையின் போது, முன்னாள் அமைச்சர் எஸ்.ரகுபதி மற்றும் மாநில நிர்வாகி ஏ.கே.எஸ். விஜயன் முன்னிலையிலேயே நிர்வாகிகள் இடையே மோதல் வெடித்ததால் கூட்டம் பெரும் பரபரப்புடன் நிறைவடைந்தது.
திமுக தலைமையின் அறிவிப்பின்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளையும் தலா இரண்டு தொகுதிகளாகப் பிரித்து, புதிய மாவட்டக் கழக நிர்வாகிகளை நியமிப்பதற்கான கருத்து கேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாநில விவசாய அணிச் செயலாளர் ஏ.கே.எஸ். விஜயன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், எம்.எல்.ஏ முத்துராஜா மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில், தொகுதி மறுசீரமைப்பு மற்றும் நிர்வாகப் பங்கீடு தொடர்பாக நிர்வாகிகள் தங்களது கருத்துக்களைத் தெரிவிக்கத் தொடங்கினர். அப்போது, முன்னாள் எம்.எல்.ஏ உதயப் சண்முகம் மற்றும் சில நிர்வாகிகளுக்கு இடையே திடீரெனக் காரசார விவாதம் ஏற்பட்டது. கருத்து வேறுபாடு முற்றி வாக்குவாதமாக மாறிய நிலையில், இரு தரப்பினரும் சத்தமிட்டு கூச்சலிட்டதால் அரங்கத்தில் கடும் குழப்பமான சூழல் நிலவியது.
மேடையில் இருந்த முன்னாள் அமைச்சர் ரகுபதி மற்றும் ஏ.கே.எஸ். விஜயன் ஆகியோர் உடனடியாகத் தலையிட்டு, மோதலில் ஈடுபட்ட நிர்வாகிகளை அமைதிப்படுத்திச் சமாதான முயற்சியில் ஈடுபட்டனர். வரவிருக்கும் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களுக்குத் தயாராகும் வகையில் தலைமை முன்னெடுக்கும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் போது, மாவட்ட அளவிலான மூத்த நிர்வாகிகளிடையே எழுந்த இந்த உட்கட்சிப் பூசல் மற்றும் மோதல் போக்கு புதுக்கோட்டை திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.