தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், சென்னை எழும்பூர் / சேத்துப்பட்டு பகுதியில் அமைந்துள்ள பயோ-சிஎன்ஜி (Bio-CNG) திடக்கழிவு மேலாண்மை நிலையத்திற்குத் திடீரென நேரில் சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார். சென்னை மாநகராட்சி மற்றும் தனியார் அமைப்பின் பொதுப் பங்களிப்புடன் (PPP Model) இயங்கி வரும் இந்த இயற்கை எரிவாயு தயாரிப்பு மையத்தில், கழிவுகளை எரியூட்டாமல் மறுசுழற்சி செய்து எரிசக்தியாக மாற்றும் செயல்முறைகளை அவர் நேரில் பார்வையிட்டார்.
இந்தத் திடக்கழிவு மேலாண்மை மையத்தில் தினசரி சேகரிக்கப்படும் சுமார் 180 டன் காய்கறி, உணவுப் பொருட்கள் மற்றும் மாட்டுச் சாணம் உள்ளிட்ட ஈரக் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படுகின்றன. இதன் மூலம் நாள்தோறும் சுமார் 4,000 மெட்ரிக் டன் அளவுக்கு இயற்கை எரிவாயு (Bio-Gas) உற்பத்தி செய்யப்பட்டு, வணிகப் பயன்பாட்டிற்காக அருகிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கழிவு மேலாண்மை செயலாக்க முறைகள், எரிவாயு சுத்திகரிப்பு தொழில்நுட்பம் மற்றும் அங்கு பணியாற்றும் ஊழியர்களின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் முதலமைச்சர் விரிவாகக் கேட்டறிந்தார்.
நகர்ப்புறங்களில் குப்பைகளைக் குறைத்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை ஆற்றலை உருவாக்கும் நோக்கில், தமிழகம் முழுவதும் இது போன்ற அதிநவீன பயோ-சிஎன்ஜி நிலையங்களை மேலும் பல இடங்களில் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை ஏற்கனவே அரசுக்குச் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. பிற மாநிலங்களின் உயர் அதிகாரிகளும் பார்வையிட்டுச் சென்ற சிறப்பு வாய்ந்த இந்தத் திடக்கழிவு மையத்தில் முதலமைச்சர் நேரில் ஆய்வு நடத்தியிருப்பது, இந்தத் திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்துவதற்கான முதற்கட்ட நடவடிக்கை எனப் பார்க்கப்படுகிறது.
முன்னதாகச் சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் எந்தவித முன்னறிவிப்புமின்றி திடீர் ஆய்வு நடத்தி அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்திருந்த முதலமைச்சர் விஜய், தற்போது திடக்கழிவு மேலாண்மை நிலையத்திலும் ஆய்வு நடத்தியுள்ளார். அரசின் முக்கியத் துறைகளின் செயல்பாடுகளைத் தளத்திற்கே சென்று முதலமைச்சர் தொடர்ந்து ஆய்வு செய்து வருவது, அதிகாரிகளிடையே சுறுசுறுப்பையும் பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.