முதலமைச்சர் விஜய்யை விமர்சித்துப் பேசிய வழக்கு மற்றும் பல்வேறு விசாரணைகளைச் சந்தித்து வரும் திருச்செந்தூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், தன்னைத் திமுகவிலிருந்து விலகித் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணையச் சொல்லிக் காவல்துறையினர் மூலமாகக் கடும் நெருக்கடியும் மிரட்டலும் கொடுக்கப்படுவதாகத் தெரிவித்துள்ள குற்றச்சாட்டு தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அனிதா ராதாகிருஷ்ணன், ஆளுங்கட்சியின் அதிகாரத்தைப் பயன்படுத்தித் தன் மீது தொடர்ந்து பொய் வழக்குகளும் கைது நடவடிக்கைகளும் ஏவப்படுவதாகக் குற்றம் சாட்டினார். “திமுகவில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துவிட்டால் அனைத்து வழக்குகளில் இருந்தும் விலக்கு அளிக்கப்படும் என்றும், இல்லையென்றால் அடுத்தடுத்த வழக்குகளில் சிறையில் அடைக்கப்படுவீர்கள் என்றும் காவல் துறை அதிகாரிகள் சிலர் மூலமாகத் தனக்கு மறைமுக மிரட்டல்கள் வருகின்றன” என்று அவர் வெளிப்படையாகப் போட்டுடைத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “நான் கலைஞர் மற்றும் தளபதி மு.க.ஸ்டாலின் வழியில் பயணிக்கும் உண்மையான தொண்டன். இது போன்ற மிரட்டல்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் ஒருபோதும் அடிபணிய மாட்டேன்” என உறுதியளித்தார். மேலும், எதிர்க்கட்சிகளை நசுக்குவதற்கும், திமுகவின் மக்கள் பிரதிநிதிகளைத் தன் பக்கம் இழுப்பதற்கும் தவெக அரசு அதிகாரத்தை அப்பட்டமாகத் தவறாகப் பயன்படுத்தி வருவதாக அனிதா ராதாகிருஷ்ணன் கடுமையாகச் சாடினார்.
விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அனிதா ராதாகிருஷ்ணனும் இத்தகைய பகிரங்கக் குற்றச்சாட்ட முன்வைத்திருப்பது தென் தமிழகத்தில் திமுக – தவெக இடையே நிலவும் அரசியல் மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. எனினும், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள தவெக தரப்பினர், சட்டம் தனது கடமையைச் செய்வதாகவும், தங்கள் மீதான தவறை மறைக்கவே அனிதா ராதாகிருஷ்ணன் இது போன்ற வீண் பழிகளைச் சுமத்துவதாகவும் பதிலளித்துள்ளனர்.