மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஜோர்டானில் உள்ள அமெரிக்க வான்படைத் தளத்தின் மீது ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் உயிரிழந்த இரண்டு அமெரிக்க ராணுவ வீரர்களின் விவரங்களை அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் (Pentagon) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் மேலும் சிலர் காயமடைந்துள்ள நிலையில், மற்றொரு வீரரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுத் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பென்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, டெக்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயதான பிரைவேட் ஈசாபெல்லா கொன்சலேஸ் (Pvt. Isabella Gonzales) மற்றும் ஹவாய் மாநிலத்தைச் சேர்ந்த 25 வயதான ஃபர்ஸ்ட் லெப்டினன்ட் டைலர் ஜேம்ஸ் பீஹான் (1st Lt. Tyler James Feehan) ஆகிய இரு வீரர்களே இத்தாக்குதலில் வீரமரணம் அடைந்துள்ளனர். ஜோர்டானில் அமைந்துள்ள ‘முவாஃபக் சால்டி’ (Muwaffaq Salti) வான்படைத் தளத்தில் ஏவுகணைத் தடுப்புப் பிரிவில் பணியாற்றி வந்த இவர்கள், வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் ஈரான் தொடுத்த திடீர் வான்வழித் தாக்குதலின் போது பலியானதாகக் கூறப்பட்டுள்ளது.
ஈரானில் இருந்து ஏவப்பட்ட அதிநவீன பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் தற்கொலைப்படை ட்ரோன்கள் அமெரிக்க வான் பாதுகாப்பு அரண்களை மீறித் தளத்தைத் தாக்கியதில் உள்கட்டமைப்புகள் பலத்த சேதமடைந்தன. இத்தாக்குதலில் படுகாயமடைந்த நான்கு வீரர்கள் உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்ற பின் வீடு திரும்பியுள்ளனர். மேலும், தாக்குதலின் போது காணாமல் போன மூன்றாவது வீரரின் உடற்பாகங்கள் அப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அதுகுறித்த மரபணுச் சோதனைகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
தங்களது வீரர்களின் தியாகத்திற்குப் பலிவாங்கும் வகையில், ஈரானிய ராணுவ இலக்குகள் மீது மேலும் தீவிரமான வான்வழித் தாக்குதல்களை நடத்துமாறு அமெரிக்கக் மத்திய கட்டளையகத்திற்கு (CENTCOM) அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். “நமது வீரர்களின் இந்த தியாகம் ஈரானுக்கு எதிரான நமது உறுதியை மேலும் பலப்படுத்தும்” என அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளதுடன், போரில் இதுவரை உயிரிழந்த அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது இரு நாடுகளுக்கும் இடையேயான மோதலை மீண்டும் ஒரு பேராபத்தை நோக்கி நகர்த்தியுள்ளது.