ஈரானுடனான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், வடக்கு ஈராக்கில் வீழ்த்தப்பட்ட ஈரானிய ட்ரோன் ஒன்றைச் செயலிழக்க வைக்கும் முயற்சியின் போது ஏற்பட்ட வெடிவிபத்தில் மேலும் ஒரு அமெரிக்க ராணுவ வீரர் உயிரிழந்துள்ளார். ஜோர்டானில் உள்ள அமெரிக்க வான்படைத் தளத்தின் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இரு வீரர்கள் பலியான அதிர்ச்சி விலகுவதற்குள், ஈராக்கில் மற்றொரு வீரர் பலியாகியிருப்பது அமெரிக்க ராணுவத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சனிக்கிழமையன்று ஈராக்கின் குர்திஸ்தான் பிராந்தியத்தில் வீழ்த்தப்பட்ட ஈரானிய ட்ரோனின் வெடிக்காத பாகங்களைக் கட்டுப்பாட்டுடன் வெடிக்கச் செய்து செயலிழக்க வைக்கும் பணிகள் (Controlled Detonation) நடைபெற்று வந்தன. அப்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் ஒரு வீரர் சம்பவ இடத்திலேயே பலியானார், மேலும் ஒரு வீரர் சிறு காயங்களுடன் தப்பினார்.
முன்னதாக ஜோர்டானில் அமைந்திருக்கும் ‘முவாஃபக் சால்டி’ வான்படைத் தளத்தின் மீது ஈரான் நடத்திய அதிநவீன ஏவுகணை மற்றும் தற்கொலைப்படை ட்ரோன் தாக்குதலில், ஹவாயைச் சேர்ந்த டைலர் ஜேம்ஸ் பீஹான் மற்றும் டெக்சாஸைச் சேர்ந்த ஈசாபெல்லா கொன்சலேஸ் ஆகிய இரு அமெரிக்க வீரர்கள் பலியானதை பென்டகன் உறுதிப்படுத்தியிருந்தது. இத்தாக்குதலில் படுகாயமடைந்த மேலும் 4 வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், போரில் பலியான மொத்த அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கை தற்போது 17 ஆக உயர்ந்துள்ளது.
தனது வீரர்களின் இழப்பிற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்கக் குடியரசுத் தலைவர் டொனால்ட் டிரம்பின் உத்தரவின் பேரில் ஈரானின் ராணுவ மையங்கள், ஏவுகணைச் சேமிப்புக் கிடங்குகள் மற்றும் கடலோரக் கண்காணிப்பு தளங்கள் மீது அமெரிக்கப் படைகள் 9-வது இரவாகத் தீவிர வான்வழித் தாக்குதல்களைத் தொடுத்து வருகின்றன. இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் எல்லை தாண்டி ஒட்டுமொத்த வளைகுடா பிராந்தியத்தையும் பேராபத்தில் தள்ளியுள்ளது.