Posted in

தலைகீழாக மாறும் அம்மா உணவகங்கள்;  முதல்வர் விஜய் அதிரடி!

தமிழகத்தில் ஏழை, எளிய மற்றும் அடித்தட்டு மக்களின் பசியைப் போக்கும் உன்னதத் திட்டமாகச் செயல்பட்டு வரும் ‘அம்மா உணவகங்கள்’, கடந்த சில ஆண்டுகளாக போதிய பராமரிப்பின்றி நலிவடைந்து காணப்பட்ட நிலையில், தற்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு அவற்றை நவீனமயமாக்கித் தலைகீழாக மாற்றி வருகிறது. மாநிலம் முழுவதுமுள்ள அம்மா உணவகங்களை மேம்படுத்த உத்தரவிட்டுள்ளதன் தொடர்ச்சியாக, சேலம் மாநகராட்சியில் இயங்கி வரும் 11 அம்மா உணவகங்களை முழுமையாகப் புதுப்பிப்பதற்காக ரூ.1 கோடியே 10 லட்சம் நிதியை அரசு ஒதுக்கீடு செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

சேலம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகள் தற்போது போர்க்கால அடிப்படையில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் குறிப்பாக மணியனூர் பகுதியில் இயங்கும் அம்மா உணவகத்தைப் புதுப்பிக்க மட்டும் தனியாக ரூ.20.5 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு உணவு அருந்த வரும் பொதுமக்களின் வசதிக்காகக் கூடுதல் உணவருந்தும் அறைகள் கட்டுதல், புதிய சமையல் பாத்திரங்கள் வாங்குதல் மற்றும் சூரமங்களம் உழவர் சந்தை உணவகத்தின் உள்கட்டமைப்பை ‘ஏ1 லெவலுக்கு’ உயர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு நவீன மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுமட்டுமன்றி, அஸ்தம்பட்டி, அரசு தலைமை மருத்துவமனை வளாகம், அம்மாப்பேட்டை, கருங்கல்பட்டி உள்ளிட்ட சேலத்தின் 11 முக்கியப் பகுதிகளில் இயங்கும் உணவகங்களிலும் பழுதுடைந்த மின்விசிறிகள், விளக்குகள் முற்றிலுமாக மாற்றப்பட்டு வருகின்றன. பொதுமக்களுக்குச் சுத்தமான குடிநீர் கிடைக்கப் புதிய ஆர்.ஓ (RO) சுத்திகரிப்பு இயந்திரங்கள் பொருத்தப்படுவதோடு, கட்டிடங்களுக்குப் புதிய வண்ணங்கள் பூசப்பட்டு கார்ப்பரேட் ஹோட்டல்களுக்கு இணையான தூய்மையான சூழலாக மாற்றப்பட்டு வருகிறது.

அரசியல் வேறுபாடுகளைப் பாராமல், முந்தைய அதிமுக அரசால் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத் திட்டத்தைச் சீரமைத்து மேம்படுத்தி வரும் முதலமைச்சர் விஜய்யின் இந்த அதிரடி நடவடிக்கை ஏழை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தவெக அரசின் இந்தச் சீரமைப்பு நடவடிக்கைகளால், தமிழ்நாட்டின் அம்மா உணவகங்களில் தினமும் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்திலிருந்து 1 லட்சத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இன்றும் அதே பழைய விலையில் (ரூ.1-க்கு இட்லி, ரூ.5-க்கு சாம்பார் சாதம், ரூ.3-க்கு தயிர் சாதம்) தரமான உணவு வழங்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் முதலமைச்சருக்குத் தங்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்து வருகின்றனர்.