Posted in

பதவி விலகுங்கள் தர்மேந்திர பிரதான்! டெல்லி மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக நடிகை ஜோதிகா ஆவேசப் பதிவு!

நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடு விவகாரத்தில் மத்தியக் கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பிரபல தென்னிந்திய நடிகை ஜோதிகா பகிரங்கமாக வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் வீதியில இறங்கித் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ‘ஜென்-சி’ (Gen-Z) தலைமுறை இளைஞர்களுக்குத் தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ள அவர், நாட்டின் எதிர்காலமான மாணவர்களின் பக்கம் தான் உறுதியாக நிற்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்துத் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் காரசாரமான பதிவொன்றை வெளியிட்டுள்ள நடிகை ஜோதிகா, “மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். நான் நமது நாட்டின் எதிர்காலமான மாணவர்களுடனும், அரசு நிர்வாகத்தின் பொறுப்புக்கூறலுக்கு (Accountability) ஆதரவாகவும் உறுதியுடன் நிற்கிறேன். உரிமைகளுக்காகத் துணிச்சலுடன் குரல் எழுப்பி வரும் ‘ஜென்-சி’ தலைமுறை இளைஞர்களை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதித்த நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தைக் கண்டித்து, டெல்லி ஜந்தர் மந்தரில் ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ (CJP) உள்ளிட்ட பல மாணவர் அமைப்புகள் மற்றும் ‘ஜென்-சி’ தலைமுறையைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கடந்த சில நாட்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்வு அமைப்பில் நிலவும் குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்தியக் கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் சூழலில், எதிர்க்கட்சிகளைத் தொடர்ந்து திரைத்துறையினரும் இதற்கு ஆதரவு தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர்.

திரையுலகில் தொடர்ந்து சமூக விழிப்புணர்வு மற்றும் பெண் உரிமை சார்ந்த அழுத்தமான குரல்களைப் பதிவு செய்து வரும் நடிகை ஜோதிகா, தற்போது மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் நீட் எதிர்ப்புப் போராட்டத்திற்கு நேரடியாக ஆதரவளித்திருப்பது தேசிய அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. ஜோதிகாவின் இந்தப் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், மாணவர் போராட்டத்திற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளதாக நெட்டிசன்களும் சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.