இங்கிலாந்தின் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூகப் பாதுகாப்பு (Social Care) முறையை முழுமையாகச் சீரமைத்து, தேசிய அளவிலான இலவசப் பராமரிப்புச் சேவையை (National Care Service) உருவாக்கத் தேவையான நிதி திரட்ட 10 சதவீத ‘மரபுரிமை வரி’ அல்லது ‘மரண வரி’ (Death Tax) விதிக்கப்படும் திட்டத்தை இங்கிலாந்து அரசு முற்றிலும் மறுக்காதது அந்நாட்டில் பெரும் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது. ஆண்டுக்கு சுமார் £18 பில்லியன் பவுண்டுகள் வரை நிதி திரட்ட இத்தகைய கட்டாய வரியை அறிமுகப்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இங்கிலாந்தில் தற்போதைய நிலவரப்படி, £23,250 பவுண்டுகளுக்கு மேல் சொத்து வைத்திருக்கும் நபர்கள் தங்களின் முதியோர் இல்லக் கட்டணம் மற்றும் பராமரிப்புச் செலவுகளைச் சொந்தச் சேமிப்பிலிருந்தே செலுத்த வேண்டும். இதனால் எண்ணற்ற குடும்பங்கள் தங்களது சொந்த வீடுகளை விற்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இக்கட்டான இந்தச் சூழலுக்குத் தீர்வு காண, அனைத்து எஸ்டேட் மற்றும் சொத்துக்கள் மீதும் இறப்பிற்குப் பிறகு 10 சதவீத கட்டாயக் வரியை விதிப்பதன் மூலம், அனைவருக்கும் இலவசச் சமூகப் பராமரிப்பை வழங்க முடியும் எனக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
முன்னதாகப் பிரிட்டன் சுகாதாரச் செயலாளராகப் பொறுப்பிலிருந்த காலத்திலிருந்தே, சொத்து வரியை மாற்றியமைத்துச் சமூகப் பாதுகாப்பிற்கு நிதி திரட்டும் யோசனையை ஆண்டி பர்ன்ஹாம் ஆதரித்து வந்துள்ளார். இருப்பினும், எதிர்க்கட்சியினரால் ‘மரண வரி’ (Death Tax) என விமர்சிக்கப்படும் இத்திட்டம், கடினமாக உழைத்துச் சிறுகச் சிறுகச் சேர்த்த சொத்துக்களைத் தங்கள் பிள்ளைகளுக்கு வழங்க நினைக்கும் குடும்பங்களைப் பெருமளவில் பாதிக்கும் எனக் எதிர்க்கட்சிகளும் பொருளாதார வல்லுநர்களும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
நாட்டின் முதியோர் மக்கள் தொகை அதிகரித்து வரும் சூழலில், சமூகப் பாதுகாப்புத் துறை கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இதனால் எவ்வித வரி உயர்வும் இன்றித் திறமையான நிர்வாகத்தின் மூலம் நிதியைத் திரட்ட வேண்டும் எனப் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், பர்ன்ஹாம் தரப்பில் இந்த 10 சதவீத வரி குறித்த தெளிவான முடிவு அல்லது மறுப்புத் தெரிவிக்கப்படாதது, பிரிட்டன் மக்களிடையே தங்களது சொத்துரிமை மற்றும் எதிர்காலச் சேமிப்பு குறித்த புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.