கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை கடற்கரைப் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்க கோரப்பட்டுள்ள விவகாரத்தில், தவெக அரசின் மௌனம் மற்றும் சில நகர்வுகள் தமக்கு வியப்பளிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். இத்திட்டத்திற்குத் தமிழக அரசு எக்காரணம் கொண்டும் அனுமதி வழங்கக் கூடாது என முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்தும் வலியுறுத்தவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
சிதம்பரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய திருமாவளவன், “பரங்கிப்பேட்டை பகுதியில் 4 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஆய்வுப் பணிகளுக்கு அனுமதி கோரப்பட்டுள்ளது. இதற்கு அரசு அனுமதி அளித்தால் அப்பகுதியின் மீன்வளம் மற்றும் ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும். மேலும், சர்வதேசப் புகழ்பெற்ற பிச்சாவரம் மாங்க்ரோவ் காடுகள் மற்றும் பறவைகள் சரணாலயத்தின் சுற்றுச்சூழல் சமநிலை கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது” என எச்சரித்தார்.
சுற்றுச்சூழல் மற்றும் விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களில் தெளிவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய தவெக அரசு, இதுபோன்ற விவகாரங்களில் தயக்கம் காட்டுவது வியப்பளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டங்களுக்கு விசிக முழு ஆதரவு அளிக்கும் என்றார். மேலும், விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற அனைத்துப் பயிர்க்கடன்களையும் நிபந்தனையின்றி முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் முதலமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.
மாநிலத்தின் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதிலும், அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தைப் பேணுவதிலும் அரசு கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் திருமாவளவன் கேட்டுக் கொண்டார். ஹைட்ரோ கார்பன் திட்டப் பாறை ஆய்வுகளுக்கு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும் என்றும், மக்களின் கோரிக்கைகளை ஏற்றுத் தவெக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.