தமிழ்நாட்டில் போதைப்பொருட்களின் நடமாட்டத்தை முற்றிலுமாகத் தடுப்பது குறித்து உயர் காவல்துறை அதிகாரிகளுடன் வீடியோ கான்ஃபரன்சிங் வாயிலாக ஆலோசனை நடத்திய தமிழ்நாடு சட்டம் – ஒழுங்கு டிஜிபி மகேஷ்குமார் அகர்வால், போதைப்பொருள் தடுப்பு வழக்குகளில் அப்பாவிகளைப் போலி வழக்குகள் (Put-up Cases) மூலம் சிக்க வைக்கக் கூடாது எனக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். மாவட்ட எஸ்.பி-க்கள் மற்றும் டிஐஜி-க்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை தொடர்பாகத் தெளிவான தகவல்கள் இல்லாமல் பேசிய ராமநாதபுரம் டிஐஜியை டிஜிபி கடுமையாக எச்சரித்தது போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு முழுவதிலும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையைத் தடுக்க ஒரு மாத கால சிறப்பு வேட்டையை நடத்த டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ள சூழலில், அனைத்து மண்டல மற்றும் மாவட்ட காவல் தலைவர்களுடனான இந்த உயர்மட்ட மறுஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய டிஜிபி, “வழக்குகளின் எண்ணிக்கையை உயர்த்திக் காட்டுவதற்காக அப்பாவி மக்கள் மீது போலி போதைப்பொருள் வழக்குகளைப் பதிவு செய்யக்கூடாது. அவ்வாறு அப்பாவிகளைக் குற்றவாளிகளாக்கினால், அவர்கள் பிற்காலத்தில் உண்மையிலேயே போதைப்பொருள் மாஃபியா கும்பலின் வலையில் விழுந்து அதனைத் தொழிலாக மாற்றிக்கொள்ளும் அபாயம் உள்ளது” என எச்சரித்தார்.
மேலும், “உண்மையான போதைப்பொருள் கடத்தல்காரர்கள், மொத்த வியாபாரிகள் மற்றும் சர்வதேச நெட்வொர்க்குகளைக் கண்டறிந்து அவர்களைக் கைது செய்யுங்கள். புதிய போதைப்பொருள் குற்றவாளிகளை காவல்துறையே உருவாக்கிவிடக் கூடாது” என்று அதிகாரிகளுக்குத் திட்டவட்டமாக அறிவுறுத்தினார். இந்த ஆலோசனையின் போது, ராமநாதபுரம் சரகத்தில் பதிவான போதைப்பொருள் வழக்குகள் மற்றும் சட்டம் – ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்த புள்ளிவிவரங்களைக் கேட்டபோது, ராமநாதபுரம் டிஐஜி போதிய தகவல்கள் இன்றிப் பதிலளித்ததால் டிஜிபி கடும் அதிருப்தி அடைந்தார்.
“முக்கியமான ஆய்வுக் கூட்டத்திற்கு வரும்போது உரிய தகவல்களுடனும் தெளிவான புள்ளிவிவரங்களுடனும் வரமாட்டீர்களா?” எனக் கூறி ராமநாதபுரம் டிஐஜியை கூட்டத்திலேயே டிஜிபி வறுத்தெடுத்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. போதைப்பொருள் ஒழிப்பில் அலட்சியமாகச் செயல்படும் அதிகாரிகள் மீது துறைரீதியான கடும் நடவடிக்கைகள் பாயும் என டிஜிபி எச்சரித்துள்ளதால், காவல்துறை உயர் வட்டாரங்களில் இந்தச் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.