Posted in

மீட்க வருதா, மிரட்ட வருதா? கொம்புகள், சங்கிலி ரம்பத்துடன் கொடூர தோற்ற ரோபோ: இணையத்தில் தீயாய் பரவும் சர்ச்சை!

தலையில் இரு கொம்புகள், நான்கு கால்கள் மற்றும் கைகளில் சுழலும் சங்கிலி ரம்பம் (Chainsaw) உடன் பயங்கரமான தோற்றத்தில் காட்சியளிக்கும் ‘த்ரீஹால்வ்ஸ்’ (Threehalves) என்ற புதிய ரோபோவின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி உலகளவில் பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த ‘சத்யரெஸ்’ (Satyress) என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த ரோபோ, பார்ப்பதற்கு ஹாலிவுட் திகில் படங்களின் சாத்தானிய அரக்கன் (Satanic Creature) போல இருப்பதாகச் சமூக வலைதளப் பயனர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

சுமார் 2 மீட்டர் உயரமும், குதிரை உடலும் மனித மேல்பாதியும் கொண்ட ‘சென்டார்’ (Centaur) வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோவின் தலையில் உள்ள கொம்புகள் வெறும் அலங்காரமல்ல; அதில் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு கருவிகளைக் கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவு, காட்டுத்தீ, கட்டிடங்கள் இடிந்து விழும் பகுதிகள் மற்றும் மின்சாரக் கம்பிகளுக்கு அருகில் ஆபத்தான முறையில் விழுந்து கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்தும் பேரிடர் மீட்புப் பணிகளுக்காகவே (Disaster Rescue) இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளதாக அதன் வடிவமைப்பாளர் போ ஜி (Beau G.) விளக்கம் அளித்துள்ளார்.

ரோபோவின் பயங்கரமான உருவத்தைக் கண்டு இணையத்தில் கருத்து தெரிவித்துள்ள பயனர்கள், “காட்டுத்தீயில் சிக்கியிருக்கும் போது என்னைக் காப்பாற்ற இந்த ரோபோ புகை மண்டலத்திற்குள் இருந்து வந்தால், நான் ரோபோவிடம் இருந்து தப்பிக்கத் தீயினுள்ளேயே ஓடிவிடுவேன்” என்றும், “அறிவியல் புனைகதை திகில் படம் நிஜமாகிவிட்டது” என்றும் கிண்டலாகவும் அச்சத்தோடும் பதிவிட்டு வருகின்றனர். இதுவரை $1,50,000 டாலருக்கும் மேல் (சுமார் ₹1.25 கோடி) செலவிட்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த முன்மாதிரி (Prototype) ரோபோ தானியங்கியாக இயங்காது என்றும், மனிதர்கள் தொலைதூரத்தில் இருந்து ரிமோட் மூலம் பாதுகாப்பாக இயக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

காட்டுத்தீ மற்றும் வெள்ளப் பேரிடர்களின் போது மீட்புப் பணியாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதைத் தடுக்கவே இந்த ரோபோ வடிவமைக்கப்பட்ட போதிலும், அதன் திகிலூட்டும் வெளித்தோற்றம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. மக்கள் பயன்பாட்டிற்கு வரும் முன்பாக அதன் தோற்றத்தை மிகவும் அமைதியானதாகவும், நட்பானதாகவும் மாற்ற வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், சங்கிலி ரம்பத்துடன் வலம் வரும் இந்த ரோபோ தொடர்பான விவாதம் டிஜிட்டல் உலகில் தணியாமல் தொடர்கிறது.