பெரு நாட்டில் நடைபெற்ற உள்ளூர் லீக் கால்பந்து போட்டியின் போது, திடீரென மைதானத்தில் மின்னல் தாக்கியதில் பெண் கால்பந்து வீராங்கனை ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் நடுவர் மற்றும் சக வீராங்கனைகள் உட்பட 12 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்தச் சோக சம்பவம் விளையாட்டு உலகை உறைய வைத்துள்ளது.
தென் அமெரிக்க நாடான பெருவின் ஹுவான்காயோ பகுதியில் அமைந்துள்ள மைதானத்தில் இரு உள்ளூர் அணிகளுக்கு இடையே விறுவிறுப்பான கால்பந்து போட்டி நடைபெற்று வந்தது. ஆட்டம் நடந்து கொண்டிருந்த போதே அப்பகுதியில் திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு கனமழை பெய்யத் தொடங்கியது. மழை தீவிரமடைந்ததால் ஆட்டத்தை நிறுத்திவிட்டு வீராங்கனைகள் மைதானத்தை விட்டு வெளியேற முற்பட்ட தருணத்தில், பயங்கர சத்தத்துடன் மின்னல் நேரடியாக மைதானத்தின் நடுவே பாய்ந்தது.
மின்னல் தாக்கிய வேகத்தில் மைதானத்தில் நின்றிருந்த பல வீராங்கனைகள் தூக்கி வீசப்பட்டு சுருண்டு விழுந்தனர். இதில் 21 வயதான வளர்ந்து வரும் பெண் கால்பந்து வீராங்கனை ஹெலன் ஆஞ்சலா (Helen Angela) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஆபத்தான நிலையில் காயமடைந்த மற்ற 12 பேர் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கால்பந்து போட்டிகளின் போது மோசமான வானிலை நிலவினால் ஆட்டத்தை உடனடியாக நிறுத்துவது மற்றும் திறந்தவெளி மைதானங்களில் மின்னல் பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்துவது குறித்த வழிகாட்டுதல்கள் காற்றில் பறக்கவிடப்பட்டதே இந்த அசம்பாவிதத்திற்குக் காரணம் எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். விளையாட்டு மைதானத்திலேயே மின்னல் தாக்கி வீராங்கனை உயிரிழந்த காணொளி இணையத்தில் பரவிப் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.