தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கும் வகையிலும், கடைகளில் ஏற்படும் அதிகப்படியான கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையிலும் டாஸ்மாக் நிர்வாகம் புதிய டிஜிட்டல் தொழில்நுட்ப மாற்றத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் முதற்கட்டமாக, வாடிக்கையாளர்கள் தங்களது கைப்பேசி வாயிலாகவே ஆன்லைனில் முன்பதிவு செய்து மதுபானங்களைப் பெற்றுக்கொள்ளும் புதிய வலைதளம் மற்றும் செயலி வசதி பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
இந்த புதிய டிஜிட்டல் முறையின் கீழ், வாடிக்கையாளர்கள் தங்களது இருப்பிடத்திற்கு அருகில் உள்ள 5 கி.மீ முதல் 25 கி.மீ சுற்றளவுக்குள் இருக்கும் டாஸ்மாக் கடைகளைத் தேர்வு செய்து, அங்கிருக்கும் மதுபான பிராண்டுகளின் கையிருப்பு (Live Inventory) விவரங்களை அறிந்துகொள்ள முடியும். மேலும், வயது வரம்புச் சரிபார்ப்பிற்குப் பின் இணையதளம் வாயிலாகவே அரசு நிர்ணயித்த சரியான MRP விலையில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்திப் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
முன்பதிவு மற்றும் கட்டணம் செலுத்தி முடித்தவுடன் வாடிக்கையாளரின் திரையில் ஒரு பிரத்யேக கியூ.ஆர் கோடு (QR Code) உருவாக்கப்படும். இந்தக் கியூ.ஆர் கோடைக் குறிப்பிட்ட டாஸ்மாக் கடையில் காண்பித்து, எவ்விதக் கூடுதல் கட்டணமும் இன்றி, நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கத் தேவையின்றித் தங்களுக்குரிய மதுபான பாட்டில்களைப் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஊழியர்கள் கூடுதல் விலை கேட்பது முற்றிலும் தடுக்கப்படும் எனக் கருதப்படுகிறது.
இந்த புதிய ஆன்லைன் முன்பதிவு வசதியை எளிதாகப் பயன்படுத்தும் வகையில் டாஸ்மாக் நிர்வாகம் சார்பாகத் தெளிவான வழிகாட்டுதல்கள் மற்றும் விளக்க வீடியோக்கள் தயார் செய்யப்பட்டுப் பணியாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள 4,000-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளிலும் இந்த கணினிமயமாக்கப்பட்ட நவீன திட்டம் படிப்படியாக நடைமுறைக்குக் கொண்டுவரப்படவுள்ளது.