Posted in

பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் அதிரடி கடிதம்!

தமிழ்நாட்டின் குடிநீர் மற்றும் பாசனத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் ‘கோதாவரி – காவிரி – குண்டாறு’ நதிகள் இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்தி, அதற்கு ‘தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம்’ என்ற அந்தஸ்தை வழங்க வேண்டும் என வலியுறுத்திப் பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார். மத்திய ஜல்சக்தி அமைச்சகத்திற்கும், தேசிய நீர் மேம்பாட்டு முகமைக்கும் (NWDA) இது தொடர்பான உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அக்கடிதத்தில், தமிழ்நாடு இயல்பாகவே மேற்பரப்பு நீர் வளங்களில் பற்றாக்குறை கொண்ட மாநிலமாக உள்ளதாகவும், தனது நீர்த் தேவைகளில் 30 சதவீதத்திற்கும் அதிகமான அளவிற்கு அண்டை மாநிலங்களையே சார்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் வளமும் கவலைக்கிடமான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் மேற்பரப்பு நீர் வளங்களைப் பெருக்குவதற்கான மிக முக்கியமான நீண்டகால வாய்ப்பாக இத்திட்டம் திகழும் என்றும், குறிப்பாகத் தென் மாவட்டங்களான புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மக்களின் குடிநீர் பிரச்சனையைத் தீர்க்க இதுவே நிரந்தரத் தீர்வாக அமையும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், இத்திட்டத்தை ஒருங்கிணைக்கப்பட்ட முறையில் கால நிர்ணயத்துடன் செயல்படுத்த மத்திய அரசு மற்றும் பயன்பெறும் மாநிலங்களின் பங்கேற்புடன் சிறப்பு நோக்க வாகனம் (Special Purpose Vehicle – SPV) ஒன்றினை அமைக்க பரிசீலிக்க வேண்டும் என முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். நதிகள் இணைப்பு தொடர்பான விரிவான திட்ட அறிக்கையில் (DPR) உள்ள சிறிய மாற்றங்களைச் சரிசெய்து, உபரி வெள்ளநீரை நீர் பற்றாக்குறை உள்ள தென்னகப் பகுதிகளுக்குத் திருப்பிவிட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மாநிலங்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏதேனும் இருப்பின், கூட்டுறவு கூட்டாட்சித் தத்துவத்தின் (Cooperative Federalism) அடிப்படையில் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வுகாண முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ள முதலமைச்சர், இத்திட்டத்தைச் செயல்படுத்தத் தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பையும் வழங்கும் என உறுதியளித்துள்ளார். தென்னிந்தியாவின் நீண்டகால நீர் பாதுகாப்பை உறுதி செய்யப் பிரதமரின் நேரடித் தலையீடு அவசியம் என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.